விளையாட்டு

'ஓடுவதிலும் வல்லவர்... தாவுவதிலும் கில்லாடி...' - ஒலிம்பிக் சாதனையாளர் கார்ல் லீவிஸ்

EllusamyKarthik

ஒலிம்பிக் தடகளத்தில் ஓடுகளத்தையும், ஆடுகளத்தையும் அலங்கரித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சாதனை நாயகன் கார்ல் லீவிஸ். 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கார்ல் லீவிஸின் சாதனைக் களங்களை பார்க்கலாம்.

ஃபெரடெரிக் கார்ல்டன் லீவிஸ். கார்ல் லீவிஸ் என்று உலக விளையாட்டு ரசிர்ககளால் அழைக்கப்படுகிறார். TRACK & FIELD என வகைப்படுத்தப்பட்ட தடகளத்தில், ஓடுகளத்தில் ஜொலிப்பவர்கள். ஃபீல்ட் எனும் பிரிவு போட்டிகளில் பெரியளவில் சாதிப்பதில்லை. ஆனால் இரண்டிலும் அசாத்திய சாதனைகளை அடுக்கியவர் கார்ல் லீவிஸ். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்ற சாதனைக்காரர் அவர். 1979 தொடங்கி 1996 வரை 17 ஆண்டுகள் ஓடுகளத்தையும், ஆடுகளத்தையும் அலங்கரித்தவர். நீளம் தாண்டுதலில் தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை வென்று வியக்க வைத்தவர். 

1984 ஆண்டு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் அவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்களை தம்வசப்படுத்தினார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து 4 பேர் அடங்கிய 100 மீட்டர் ஓட்டத்திலும் கார்ல் லீவிஸ் அடங்கிய அமெரிக்க அணி தங்கம் வென்றது.

முதல் ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கங்களை வென்றிருந்த நிலையில், 1988-ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஏமாற்றவில்லை அவர். 100 மீட்டர் ஓட்டத்தில் இந்த தடவையும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அந்த காலகட்டத்தில் அவருக்கானதாகவே அறியப்பட்ட நீளம் தாண்டுதலிலும் முதலிடம் பிடித்தார்.

1992-ஆம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4 பேர் கொண்ட 100 மீட்டர் ரிலே ஒட்டத்தில் கார்ல் லீவிஸை உள்ளடக்கிய அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வென்றது. நீளம் தாண்டுதலில் ஒலிம்பிக் ஹாட்ரிக் தங்கம் என்ற அசாத்திய சாதனையை அரங்கேற்றினார்.

1996-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் கார்ல் லீவிஸை வெல்ல யாருமில்லை. தொடர்ந்து நான்காவது ஒலிம்பிக் போட்டியாக தங்கத்தை வென்றார். போனஸாக, 200 மீட்டர் ஓட்டத்தில் தம் தேசத்திற்காக வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்தார் கார்ல் லீவிஸ். தமது அற்புதமான சாதனைகளால் தற்போது 59 வயதாகும் கார்ல் லீவிஸ் இன்றளவும் ரசிகர்களால் நினைவு கூரப்படுகிறார்.