Yamila Rodriguez
Yamila Rodriguez Twitter
கால்பந்து

“வலிக்கிறது.. தயவுசெய்து நிறுத்துங்கள்”- மெஸ்ஸி ரசிகர்களிடம் அர்ஜென்டினா வீராங்கனை வேண்டுகோள்!

Rishan Vengai

சினிமா, விளையாட்டு என எந்தவிதமான துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் இருபெரும் ஜாம்பவான்களின் ரசிகர்கள், இரு பிரிவுகளாக மாறி, ஒருவருக்கு ஒருவர் எதிரெதிராக நின்று பெரும் வார்த்தைப்போரை இணைய வழியாகவும் நடைமுறையிலும் நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள். இதற்கு கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் மெஸ்ஸி ரொனால்டோவும் விதிவிலக்கல்ல. அப்படியான ஒரு ‘ரொனால்டோவா மெஸ்ஸியா’ வார்த்தைப்போரில், அர்ஜென்டினா மகளிர் கால்பந்து வீராங்கனை யமிலா ரோட்ரிக்ஸ் தற்போது சிக்கியுள்ளார்.

ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்ட அர்ஜென்டினா வீராங்கனை!

ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரரான ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார். இதையடுத்து “அர்ஜென்டினாவிற்காக 36 வருடத்திற்கு பிறகு உலகக்கோப்பை வென்றவரான லியோனல் மெஸ்ஸியின் உருவத்தை அவர் ஏன் டாட்டூ போடவில்லை?” என மெஸ்ஸி ரசிகர்களும் அர்ஜென்டினா ரசிகர்களும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

Yamila Rodriguez

தன் உடலில் யமிலா முன்னாள் அர்ஜென்டினா ஜாம்பவான் மரடோனாவின் முகத்தை டாட்டூ போட்டிருந்த போதிலும், மெஸ்ஸி மீதான வெறுப்பை அவர் காண்பித்துவிட்டார் எனக்கூறி தொடர்ந்து "Anti-Messi" என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இத்துடன் கடந்த ஆண்டுகளில் அவர் போஸ்ட் செய்திருந்ததாக, பல ஸ்கிரீன் ஷாட்டுகள் இப்போது மீண்டும் எடுக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

அதிலொன்றில் அவர் மெஸ்ஸி மீதான மோசமான தாக்குதலை வெளிப்படுத்தியிருந்தார். இத்துடன் கடந்த ஆண்டு உலகின் தலைசிறந்த வீரர் யார் என்று கேள்விக்கு ரொனால்டோ என அவர் பதலளித்திருந்த ஒரு போஸ்ட்டும் இப்போது மீண்டும் பகிரப்பட்டு, அதற்காகவும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் யமிலா.

போதும் நிறுத்துங்கள் வலிக்கிறது!

இந்நிலையில் ரசிகர்களின் மோசமான ட்ரோல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாவில் பதிலொன்றை அளித்துள்ளார் யமிலா. அதில், “தயவுசெய்து நிறுத்துங்கள், எப்போது நான் மெஸ்ஸிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? இரக்கமே இல்லாமல் நீங்கள் வைக்கும் அவதூறுகள் என்னை காயப்படுத்துகின்றன. உங்களுக்கு பிடிக்காத ஒருவரை நான் என் ரோல் மாடலாக வைத்திருக்க கூடாதா? தேசிய அணியில் நம் மெஸ்ஸி ஒரு சிறந்த கேப்டன் தான், ஆனால் என் இன்ஸ்பிரேஷனும், ரோல் மாடலும் எப்போதும் ரொனால்டோ தான். அதற்காக நான் மெஸ்ஸியை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை” என்று எழுதியுள்ளார்.

Yamila Rodriguez

மேலும், “என்ன பிரச்சனை உங்களுக்கு? நம் அனைவரும் நம்முடைய நாட்டை சேர்ந்த வீரரை தான் நேசிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் நம் யாருக்கும் இல்லை. இது கால்பந்து என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரவர்களின் விருப்பத்தின்பேரில் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷலான விஷயம் இருக்கும். அப்படி செய்யும்போது, அவர்கள் ஒன்றை முன்னிலைப்படுத்திவிட்டு மற்றொன்றை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. போதும், இது என்னை சோர்வடையச் செய்கிறது. நிறைய வலியை தருகிறது. நிறுத்துங்கள்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார். இப்பதிலில் ரொனால்டோ மெஸ்ஸி இணைந்துள்ள புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.