Lionel Messi web
கால்பந்து

FIFA உலகக் கோப்பை 2026.. மெஸ்ஸி ரசிகர்களுக்கு அதிர்ச்சி! காரணம் என்ன?

FIFA உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புகழ்பெற்ற கால்பந்து வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

PT WEB

2026 FIFA உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலக கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி தனது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தற்போதைய கிளப் அணியான இன்டர் மியாமி அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் தொடரில், பிலடெல்பியா யூனியன் அணியை எதிர்கொண்ட இன்டர் மியாமி அணி பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல் அசிஸ்ட்களை வழங்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். எனினும், ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் இடது தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட அசௌகரியத்தால் அவதிப்பட்ட மெஸ்ஸி, வலியை உணர்ந்தபடி மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் உடனடியாக களமிறக்கப்பட்டார்.

இதையடுத்து, போட்டி முடிந்த மறுநாள் லியோனல் மெஸ்ஸிக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில், இடது தொடையின் பின்பகுதியில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான விளையாட்டு சுமை காரணமாக தசை சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நல்வாய்ப்பாக, மெஸ்ஸிக்கு தசை நார் கிழிவு போன்ற தீவிரமான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், உலகக் கோப்பை தொடங்க உள்ள முக்கியமான நேரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது அர்ஜென்டினா அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெஸ்ஸி எப்போது முழுமையான உடற்தகுதியுடன் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவார் என்பது குறித்து இன்டர் மியாமி கிளப் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. இதனால், ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது