sunil chhetri
sunil chhetri Facebook
கால்பந்து

HBD Sunil Chhetri | கேப்டன், லீடர், லெஜண்ட்... ஹேப்பி பர்த்டே சுனில் சேத்ரி!

Viyan

சுனில் சேத்ரி - இந்திய அணியின் முன்னணி கால்பந்து வீரர். இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அதிக கோல் அடித்தவர். அதுமட்டுமல்லாமல் தற்போது விளையாடிவரும் சர்வதேச கால்பந்து வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர். இந்திய கால்பந்தின் ஐகானான அவருக்கு இன்று பிறந்த நாள்.

சர்வதேச அரங்கில் நான்காவது இடம்:

2005ம் ஆண்டு தன் 21 வயதில் இந்திய சீனியர் அணிக்காக அறிமுகமானார் சுனில் சேத்ரி. பாகிஸ்தானுக்கு எதிரான அந்த அறிமுக போட்டியிலேயே தன் முதல் கோலையும் அடித்தார் அவர். 2008ம் ஆண்டு தஜிகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன் முதல் ஹாட்ரிக்கை பதிவு செய்தார் சேத்ரி. அப்போது தொடங்கிய அவரது கோல் மழை இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ ஃபார்வேர்ட்கள் இந்திய கால்பந்து அரங்கில் அறிமுகம் பெற்றனர். ஆனால் யாராலும் சேத்ரியின் அளவுக்கு யாராலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.

sunil chhetri

கடந்த சில ஆண்டுகளாக அவருடைய ஃபார்ம் முன்பைப் போல இல்லை. 38 வயது ஆகிவிட்ட சேத்ரிக்கு தன் கிளப் அணியிலேயே ரெகுலரான இடம் இல்லை. இருந்தாலும் இந்திய ஜெர்ஸி அணிந்துகொண்டு அவர் விளையாடும்போதெல்லாம் எப்படியும் கோலடித்துவிடுகிறார். கடினமான தருணங்களில் இந்திய அணி தடுமாறி கொண்டிருக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து எப்படியும் கோலடித்துவார் அவர். 2023ல் மட்டுமே 8 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார் அவர். SAFF சாம்பியன்ஷிப்பில் கூட பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.

சேத்ரிக்கு ஆவணப்படங்களை வெளியிட்ட ஃபிஃபா!

இதுவரை 92 கோல்கள் அடித்திருக்கும் சேத்ரி இன்னும் 8 கோல்கள் அடித்தால் 100 சர்வதேச கோல்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமை பெறுவார். இன்னும் சர்வதேச அரங்கில் விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக இவர்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதைப் பெருமைப்படுத்தும் விதமாக 2022 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்பாக சேத்ரி பற்றி 3 ஆவணப்படங்களை வெளியிட்டது ஃபிஃபா!

sunil chhetri

சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல்:

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - போர்ச்சுகல் - 123 கோல்கள்

2. அலி டேய் - ஈரான் - 109 கோல்கள்

3. லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா - 103 கோல்கள்

4. சுனில் சேத்ரி - இந்தியா - 92 கோல்கள்

5. மொக்தார் தஹாரி - மலேசியா - 89 கோல்கள்

பெங்களூருவின் செல்லப் பிள்ளை!

கிளப் கால்பந்தைப் பொறுத்தவரை மொத்தம் 10 அணிகளுக்கு விளையாடியிருக்கிறார் சேத்ரி. 2002ம் ஆண்டு புகழ்பெற்ற மோஹன் பகான் அணியில் இணைந்தவர், ஐ-லீக், ஐ.எஸ்.எல் அரங்கிலும் முத்திரை பதிக்கத் தவறியதில்லை. இந்தியாவில் அசத்திய அவரை ஒப்பந்தம் செய்ய வெளிநாட்டு கிளப்களும் பலமுறை ஆர்வம் காட்டின. 2009ம் ஆண்டு சமயத்தில் ஸ்காட்டிஷ் பிரீமியர் லீக் அணியான செல்டிக் சேத்ரியை தொடர்ந்து ஸ்கௌட் செய்தது. அந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் இரண்டாவது டிவிஷனில் ஆடிய குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் இங்கிலாந்து அரசு அவர் அங்கே இணைவதற்கான அணுமதி (Work Permit) கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அடுத்த மார்ச் மாதமே அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான கான்சஸ் சிட்டி விசார்ட்ஸ் அவரை ஒப்பந்தம் செய்தது. அதன் மூலம் தெற்கு ஆசியாவுக்கு வெளியே விளையாடிய மூன்றாவது இந்தியர் ஆனார் அவர்.

2012ல் அவர் ஐரோப்பாவில் விளையாடுவதற்கான வாய்ப்பை மறுபடியும் பெற்றார். போர்ச்சுகலின் ஸ்போர்டிங் சிபி அணி அவரை ஒப்பந்தம் செய்து தங்கள் ரிசர்வ் அணியில் இணைத்தது. ஆனால் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதற்காக சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு லோனில் அனுப்பப்பட்டார் அவர். அதன்பிறகு அவர் கரியர் இந்தியாவில் தான் தொடர்ந்தது.

sunil chhetri

பல முன்னணி அணிகளுக்கு விளையாடியிருந்தாலும் பெங்களூரு எஃப்.சி அணிக்காகத்தான் அதிக சீசன்கள் விளையாடினார் சேத்ரி. 2 ஐ லீக் சீசனிலும், 6 ஐஎஸெல் சீசனிலும் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறார் அவர். இதுவரை அந்த அணிக்காக 201 போட்டிகளில் விளையாடி 89 கோல்கள் அடித்திருக்கிறார். கிரிக்கெட்டில் விராட் கோலியை தங்கள் சொந்த வீரராக பெங்களூரு ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதுபோல், கால்பந்து ரசிகர்கள் சேத்ரியை தங்களுள் ஒருவராகவே ஏற்றுக்கொண்டுவிட்டனர். இதுவரை கிளப் 452 கிளப் போட்டிகளில் விளையாடியிருக்கும் சேத்ரி 217 கோல்கள் அடித்திருக்கிறார் அவர்.

கால்பந்து குடும்பம்:

சுனில் சேத்ரியின் குடும்பத்தில் பலருக்கும் கால்பந்தோடு தொடர்போடு இருக்கிறது. சுனில் தந்தை கே.பி.சேத்ரி இந்தியன் ஆர்மியில் இருந்தவர். அவர் ஆர்மி அணிக்காக கால்பந்து விளையாடியிருக்கிறார். சுனிலின் இரட்டைச் சகோதரி நேபாள தேசிய அணிக்காக கால்பந்து ஆடியிருக்கிறார். அவர்கள் பெற்றோர்களின் பூர்வீகம் நேபாளம் என்பதால் அவர் நேபாள அணிக்கு ஆடினார். சேத்ரி மணந்தது கூட முன்னாள் மோஹன் பகான் கால்பந்து வீரர் சுப்ரதா பட்டசார்யாவின் மகள் சோனமைத் தான். இப்படி குடும்பம் முழுதும் கால்பந்து ரத்தம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.