Olga Carmona
Olga Carmona twitter
கால்பந்து

அன்று தமிழ்நாடு..இன்று ஸ்பெயின்; வீராங்கனைகளின் கனவுகளுக்காக தந்தையின் இறப்பை மறைத்த இரு சம்பவங்கள்!

Prakash J

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும், 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கேப்டன் ஒல்கா கர்மோனா அடித்த கோலே, அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி கோல் அடிக்க முயன்றாலும், அதை ஸ்பெயின் அணி வீராங்கனைகள் தடுத்து நிறுத்தினர்.

முதல்முறையாக உலக்கோப்பையை வென்ற ஸ்பெயின்

தொடர்ந்து ஆட்டநேர இறுதிவரை இரு அணிகளுமே மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால், முடிவில், ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன், ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பையையும் முதன்முறையாக உச்சிமுகர்ந்தது. இந்த உற்சாகத்தில் ஸ்பெயின் அணி திளைத்து நிற்க, அப்போது அந்நாட்டு கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸ், வீராங்கனை ஜெனிபருக்கு முத்துமிட்டு வாழ்த்தியது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீராங்கனை ஜெனிபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதனையடுத்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் கால்பந்து சங்கத் தலைவர் மன்னிப்பு கோரினார்.

வென்றதன் பின்னணியில் அரங்கேறிய சோகம்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றதன் பின்னணியில் ஒரு சோகமும் அரங்கேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையின் இறுதி முடிவாக இருப்பது, இறப்புத்தான். அதை, யாராலும் ஒதுக்கிவிடவும் முடியாது; அதிலிருந்து ஓடி ஒளியவும் முடியாது. இது, காலத்தின் கட்டாயம். ஆனால், பிரிவின் துயரை யாராலும் ஆற்ற முடியாதது. அதிலும் ஒவ்வொரு நாட்களையும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் செய்கைகளாலும் நம்பிக்கைகளாலும் அளித்த நினைவுகளை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிட முடியாது. அவர்கள் அமைத்துக் கொடுத்த பாதையில் எட்டாத உயரத்திற்குச் சென்றவர்கள் எத்தனையோ பேர். அதில் ஒருவர்தான் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை மகளிர் இறுதி ஆட்டத்தில் ஒற்றைக் கோல் அடித்து கோப்பையைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்தவர் ஒல்கா கர்மோனா.

தந்தை இறந்த செய்தியை மறைத்த உறவினர்கள்

இவரின் உழைப்புக்குப் பின்னால் இருந்தவர்தான் இவரது தந்தை. ஒல்கா கர்மோனாவின் தந்தை உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அப்படி, தன் உழைப்புக்கு பெரும் பங்கு வகித்த அவருடைய இறப்புச் செய்தியைக்கூட, பெற்ற மகளுக்கு உறவினர்கள் தெரிவிக்கவில்லை. காரணம், இறுதிப்போட்டி. அதில் எந்த இடையூறும் இல்லாமல் உற்சாகத்துடன் விளையாட வேண்டும் என்பதற்காகவே இந்தத் துயரச் செய்தியை மறைத்துள்ளனர். தன் மகள், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுகூட ஒல்கா தந்தையின் கனவாகக்கூட இருந்திருக்கலாம் அல்லவா.

எல்லா பெற்றோருமே தன் குழந்தைகள் உச்சத்தில் இருப்பதைப் பார்த்துத்தானே மகிழ்ச்சியடைவர். அதற்கான வாய்ப்பு நெருங்கிவரும் வேளையில் இப்படியான துயரச் செய்தியை யார்தான் சொல்லக்கூடும்?

இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் அல்லது அதில் மன தைரியமின்றி சோகத்துடன் விளையாடி தோற்றுவிட்டால் என்ன ஆவது? எதிர்காலமே சிதைந்துவிடும். அது மட்டுமா? நாட்டுக்கான வெற்றியும் போய்விடுமே? தன்னை நம்பியிருக்கும் நாட்டுக்காக, களிப்புடன் விளையாடும் கனத்தில் யாராவது கண்ணீர்ச் செய்தியைச் சொல்வார்களா? அதனால்தான் அமைப்பும், உறவினர்களும் சொல்லாமல் மறைத்துள்ளனர்.

கடந்த 20ஆம் தேதி இறுதிப்போட்டி இருந்ததால், ஒல்காவிடம் தந்தையின் இறப்புச் செய்தியை உடனடியாகச் சொல்லாமல் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மறைத்தனர். களத்தில் பம்பரமாக வலம்வந்த கர்மோனாவிடம் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்தில் தந்தை இறந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோகத்துடன் பதிவிட்ட ஒல்கா கர்மோனா

இதனைக் கேட்டு சோகத்தால் கண்ணீர்விட்ட அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், 'தனித்துவமான ஒன்றை அடைய நீங்கள் எனக்கு பலத்தை அளித்துள்ளீர்கள் என்பதை அறிவேன். இன்றிரவு என்னை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். என்னைப் பற்றிப் பெருமைப்பட்டு இருப்பீர்கள் என்பது தெரியும். அப்பா.. உங்களது ஆத்மா சாந்தியடையட்டும்' எனத் தெரிவித்துள்ளார். கோப்பையை வென்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், ஸ்பெயின் அணி கேப்டனின் தந்தையின் மறைவுச்செய்தி, அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் தமிழகத்தில் அரங்கேறிய நிகழ்வு

இதேபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஆண்டு, நம் தமிழகத்திலும் அரங்கேறி அனைத்து இதயங்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீராங்கனையான புதுக்கோட்டை கல்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த லோக பிரியா என்பவரும் பங்கேற்றார். அதன்படி, காமன்வெல்த் போட்டியில் ஜூனியர் பெண்கள் 52 கிலோ எடைப்பிரிவில் 350 கிலோ வரை பளு தூக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார், லோக பிரியா. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முந்தைய நாள் அவரது தந்தை இறந்துபோன நிலையில் அதுபற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. பின்னர் தாயகம் திரும்பிய லோக பிரியா, தன் தந்தையின் கல்லறையைப் பிடித்து கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் இதயங்களை எல்லாம் கனக்கச் செய்தது.

இதேபோல் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கரும், விராட் கோலியும், தன் தந்தை இறந்த செய்தியறிந்தும் அதுபற்றிய துக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அணிக்காக நம்பிக்கையுடன் ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.