Neymar
Neymar Bruna Prado
கால்பந்து

பீலேவின் சாதனையை முறியடித்த நெய்மார்... அடுத்த டார்கெட் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மெஸ்ஸியும்!

Viyan

பொலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் 2 கோல்கள் அடித்து, பிரேசிலின் டால் ஸ்கோரராக உருவெடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் நெய்மார். இதன்மூலம், நெடுங்காலமாக நிலைத்து வந்த கால்பந்தின் கடவுள் பீலேவின் சாதனையை முந்தியிருக்கிறார் நெய்மார். நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த பீலேவின் சாதனையை அவர் கடந்துவிட்டிருக்கும் நிலையில், இப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகியோரின் இடத்துக்குச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. அதுதான் 100 சர்வதேச கோல்கள்!

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார். இந்த தசாப்தத்தில் பிரேசில் கால்பந்தின் அடையாளமாக விளங்கி வருகிறார். 2010ம் ஆண்டு தன் 18 வயதில் பிரேசில் அணிக்காக அவர் அறிமுகம் ஆனதில் இருந்தே அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. சீனியர் அரங்கில் விளையாடத் தொடங்கியதுமே பீலேவைப் போல் உலகப் புகழ் பெறத் தொடங்கினார் அவர். பிரேசில் அணிக்காக 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிராக அறிமுகம் ஆனவர், அந்தப் போட்டியிலேயே கோலும் அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். அப்போதிருந்து இடைவிடாமல் தொடர்ந்து கோல் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கிறார் அவர்.

பிரேசில் அணி கடைசியாக 2002ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு நெய்மார் அந்த அணிக்கு மீண்டும் உலகக் கோப்பை வென்று கொடுப்பார் என்று பிரேசில் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2014 உலகக் கோப்பையின் காலிறுதியில் எதிர்பாராத விதமாக அவர் காயமடைந்து வெளியேறினார். அதனால் அவரால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அந்தப் போட்டியில் 1-7 என படுதோல்வி அடைந்தது பிரேசில். அடுத்த 2018 உலகக் கோப்பையில் பெல்ஜியத்துக்கு எதிராக காலிறுதியிலேயே தோற்றது அந்த அணி.

இந்நிலையில் கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பையை நெய்மார் நிச்சயம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது அவருடைய கடைசி உலகக் கோப்பையாகவும் இருக்கலாம் என்பதால், அவர் நிச்சயம் வேறு லெவலில் ஆடுவார் என்று மக்கள் நினைத்தனர். உலகக் கோப்பை மட்டுமல்லாமல், பிரேசிலின் ஆல் டைம் டாப் ஸ்கோரர் என்ற சாதனையையும் நெய்மார் படைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த உலகக் கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. பிரேசில் அணி காலிறுதியில் குரேயேஷியாவிடம் தோற்று வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில் நெய்மார் 2 கோல்கள் மட்டுமே அடித்தார். அந்த இரண்டாவது கோல் (குரோயேஷியாவுக்கு எதிராக அடித்தது) சர்வதேச அரங்கில் அவருடைய 77வது கோலாக அமைந்தது. அதன்மூலம் பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை சமன் செய்தார் அவர். அந்த உலக்க கோப்பையின்போதே அந்த சாதனையையும் நெய்மார் முறியடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில், பிரேசில் வெளியேறியதால் அவரால் முடியாமல் போனது.

அந்த உலகக் கோப்பைக்குப் பிறகு பிரேசில் அணிக்காக நெய்மார் பங்கேற்காமல் இருந்தார். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டிருந்ததால் அவர் பிரேசில் அணிக்கு மீண்டும் விளையாடும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியிலிருந்து சவுதி அரேபியாவின் அல் ஆலி அணிக்கு சென்ற அவர், காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வராத நிலையில் அவர் ஆடாமலேயே இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை, பொலிவியா அணியுடன் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் களமிறங்கினார் நெய்மார்.

Cristiano Ronaldo

பிரேசில் அணிக்கு 17வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. அந்த கோலை அடித்து பிரேசிலின் டாப் ஸ்கோரராக நெய்மார் உருவெடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில், அந்த பெனால்டியை தவறவிட்டார் அவர். இருந்தாலும் ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ராட்ரிகோ ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை கோலாக்கி பீலேவின் சாதனையை முந்தினார் நெய்மார். இதன் மூலம் பிரேசில் கால்பந்தின் டாப் ஸ்கோரராக தன் பெயரை தனியாக பொன் எழுத்துகளால் எழுதினார். அதோடு ஸ்டாப்பேஜ் டைமின் மூன்றாவது நிமிடத்திலும் கோலடித்து தன் கணக்கை 79 ஆக மாற்றினார் அவர்.

பிரேசிலின் டாப் கோல் ஸ்கோரர்கள்

Neymar

1. நெய்மார் - 79 கோல்கள் - 125 போட்டிகள்

2. பீலே - 77 கோல்கள் - 92 போட்டிகள்

3. ரொனால்டோ நசாரியோ - 62 கோல்கள் - 98 போட்டிகள்

4. ரொமாரியோ - 55 கோல்கள் - 70 போட்டிகள்

5. ஜிகோ - 48 கோல்கள் - 71 போட்டிகள்

எப்படியோ பல ஆண்டுகள் எதிர்பார்த்திருந்த சாதனையை முறியடித்துவிட்டார் நெய்மார். ஆனால் இந்த சாதனை அவரது பெயரை எந்த அளவுக்கு நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறிதான். அவர் உலகக் கோப்பையை வென்றிடாத நிலையில், இந்த 79 கோல்கள் பிரேசில் கால்பந்தில் அவரது இடத்தை எங்கு வைக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் அடுத்த கட்டத்துக்குச் சென்றால் அவர் பெயர் நிலைத்து நிற்குமோ என்னவோ. அடுத்த கட்டம் என்றால் ரொனால்டோ, மெஸ்ஸியின் இடம் தான்.

கடந்த 10 ஆண்டுகளில் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து நெய்மார் தான் பெரிய அளவுக்குக் கொண்டாடப்பட்டார். அவர்களுக்கு இணையான சாதனை செய்யக்கூடியவராகக் கருதப்பட்டார். பாலன் டி ஓர் போன்ற விருதை அவர்கள் இருவருமே மாறி மாறி வென்றுகொண்டிருக்க, அவர்கள் ஆதிக்கத்தை முறியடித்து நெய்மார் புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவரால் பாலன் டி ஓர் விருதை ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. குறைந்தபட்சம் சர்வதேச அரங்கில் அந்த ஜாம்பவான்களைப் போல் 100+ கோல்கள் அடித்தாலாவது அவர்களுக்கு இணையாக நெய்மார் பிற்காலத்தில் கொண்டாடப்படலாம்.

இப்போது 79 கோல்கள் அடித்திருக்கும் அவர், ஃபிட்டாக இருக்கும்பட்சத்தில் இன்னும் 5 ஆண்டுகள் வரை சர்வதேச அரங்கில் விளையாட முடியும். ஆண்டுக்கு 4-5 கோல்கள் அடித்தால் கூட நிச்சயம் அவரால் 100 கோல்களைக் கடக்க முடியும். இதுவரை சர்வதேச அரங்கில் 3 வீரர்கள் மட்டுமே 100 கோல்களுக்கு மேல் அடித்திருக்கும் நிலையில், நெய்மார் அந்தப் பட்டியலில் இணையும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் பெயர் நிச்சயம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

Lionel Messi

சர்வதேச அரங்கில் 100 கோல்களுக்கு மேல் அடித்தவர்கள்

1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - போர்ச்சுகல் - 123 கோல்கள்

2. அலி டேய் - ஈரான் - 108 கோல்கள்

3. லயோனல் மெஸ்ஸி - அர்ஜென்டினா - 104 கோல்கள்