Moises Caicedo
Moises Caicedo File Image
கால்பந்து

ஒரு வழியாய் ஓய்ந்தது கைசீடோ பஞ்சாயத்து... செல்சீ அணியில் இணைந்தார் இளம் மிட்ஃபீல்டர்..!

Viyan

செல்சீ, லிவர்பூல் அணிகளுக்கு இடையே இழுபறி நடந்துகொண்டேயிருக்க, திங்கள் கிழமை அவரை 132 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறது செல்சீ. இதுவே ஒரு இங்கிலாந்து கிளப் செய்திருக்கும் ரெக்கார்ட் டிரான்ஸ்ஃபர்.

யார் இந்த கைசீடோ:

Moises Caicedo

மாய்சஸ் கைசீடோ - ஈகுவடார் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர். 21 வயதான கைசீடோ டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டராக விளையாடக் கூடியவர். குறுகிய காலகட்டத்திலேயே ஐரோப்பிய கால்பந்து அரங்கில் பெரிய உயரங்களை அடைந்தார் அவர். 2019ம் ஆண்டு ஈகுவடாரின் இண்டிபெண்டென்ட் டெல் வால் அணிக்காகத் தன் முதல் சீனியர் போட்டியில் விளையாடினார் அவர். இரண்டு ஆண்டுகள் அந்த அணியில் இருந்தவரை, 2021ம் ஆண்டு பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணி வாங்கியது. அங்கு மிகச் சிறந்த நடுகள வீரர்களுள் ஒருவராக உருவெடுத்தார் அவர்.

நம்பர் 6 என்று சொல்லப்படும் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்ட் ரோலில் செயல்படக்கூடியவரான கைசீடோ, ஆட்டத்தை நன்றாக கன்ட்ரோல் செய்யக்கூடியவர். பொசஷனை ஹோல்ட் செய்வது, ஏரியல் பால்கள் வெல்வது, இன்டர்சப்ஷன்கள், டேக்கிள்கள் என டிஃபன்ஸிவ் பொறுப்புகளில் பக்காவாக செயல்படக்கூடியவரான அவர், நல்ல பாஸிங் திறனும் கொண்டவர். அதனால் தான் பல அணிகள் அவர் மீது கண் வைத்திருந்தன.

செல்சிக்கு கைசீடோ ஏன் தேவை?

குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே அவரை வாங்கவேண்டும் என்று செல்சீ அணி துடியாய் துடித்துக்கொண்டிருந்தது. புதிய ஓனர் டாட் போலி முற்றிலும் இளைஞர்கள் நிறைந்த ஒரு அணியை உருவாக்கத் தொடங்கினார். அதன் காரணமாய் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக பல சீனியர் வீரர்கள் அணியிலிருந்து வெளியேறினர். அதிலும் அந்த அணியின் நடுகளமோ ஒட்டுமொத்தமாக காலியானது. ஜார்ஜினியோ, கோவசிச், கான்டே, லோஃப்டஸ் சீக், மேசன் மவுன்ட் என பெரும்பாலான நடுகள வீரர்கள் அணியிலிருந்து வெளியேறினர். என்சோ ஃபெர்னாண்டஸ், கானர் காலகர் போன்ற நம்பர் 8 பொசிஷனில் ஆடக்கூடிய வீரர்களே அணியில் இருந்ததால், ஒரு நம்பர் 6 அந்த அணிக்கு நிச்சயம் தேவைப்பட்டது. ஆண்ட்ரே சான்டோஸ் போன்ற இளம் வீரர் ஒருவர் இருந்தாலும், செல்சீ போன்ற ஒரு பெரிய அணிக்கு நன்றாக அனுபவப்பட்ட ஒரு வீரர் தேவைப்பட்டது. அதனால் கைசீடோவை எப்படியும் செல்சீ வாங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதுதான் கோதாவில் குதித்தது லிவர்பூல்.

லிவர்பூலுக்கு கைசீடோ ஏன் தேவை?

Moises Caicedo

செல்சீயைப் போல் லிவர்பூலின் நடுகளமும் இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் மொத்தமாக காலியானது. ஜேம்ஸ் மில்னர், ஜோர்டன் ஹெண்டர்சன், ஃபபினியோ, நபி கீடா, அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லைன் என எல்லோரும் வெளியேறினர். செல்சீயைப் போல் இந்த அணியும் நம்பர் 8 வீரர்களைத் தான் வாங்கியதே தவிர, நம்பர் 6 வீரர்கள் யாரும் இல்லை. செல்சீ அணிக்கெதிரான போட்டியைப் பார்த்திருந்தாலே ஏன் அந்த அணிக்கு ஒரு நம்பர் 6 தேவை என்பது புரிந்திருக்கும். அவர்கள் அட்டாக்குக்கு ஒரு கவர் கொடுக்க நல்ல டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் அந்த அணிக்கு நிச்சயம் தேவைப்பட்டது.

செல்சீ vs லிவர்பூல் யுத்தம்

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கைசீடோவுக்கு இந்த இரு அணிகளும் போட்டி போட்டன. பிரைட்டன் எதிர்பார்த்த தொகையை ஏற்றுக்கொள்ள செல்சீ தாமதம் செய்தது. அந்த அணியில் இணைய கைசீடோ எப்போதே ஒத்துக்கொண்டிருந்தாலும் அந்த இரு அணிகளுக்குள்ளும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய லிவர்பூல் சுமார் 110 மில்லியன் யூரோக்களுக்கு அவரை வாங்க முன்வர, பிரைட்டன் அதை ஏற்றுக்கொண்டது. பிரைட்டன் ஏற்றுக்கொண்டிருந்தாலும் கைசீடோ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தான் செல்சீ அணியில் தான் விளையாடவேண்டும் என்பதில் அவர் மிகவும் தீர்க்கமாக இருந்தார். அதனால் லிவர்பூல் அணியால் அவரை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

132 மில்லியன் டாலருக்கு வாங்கிய செல்சீ

இந்நிலையில் இந்திய நேரப்படி திங்கள் கிழமை இரவு கைசீடோ செல்சீ அணியோடு ஒப்பந்தம் செய்துவிட்டதாக அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரை 132 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து பிரைட்டன் அணியிடம் இருந்து வாங்கியது செல்சீ. ஒரு வீரரை வாங்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளப் ஒன்று செலவளித்திருக்கும் அதிகபட்ச தொகை இதுதான்.