மெஸ்ஸி, கால்பந்து வரலாற்றில் 1300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இளம் வயதில் சவால்களை எதிர்கொண்டாலும், தனது திறமையால் உலகக்கோப்பையை வென்று, இன்டர் மியாமி அணியை MLS இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தார். ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி, மெஸ்ஸி தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டு வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுவர் மெஸ்ஸி. தேசம் கடந்து பல்வேறு உலக ரசிகர்களை கொண்டிருக்கும் மெஸ்ஸி, தன்னுடைய அபாரமான கால்பந்து திறனால் பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், எதிரணியினரை கடந்து செல்வதிலும் தனித்துவமான திறமை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் கோல்களை அடிப்பதிலும், மற்றவர்களுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் வல்லவர்.
இளம் வயதில் ஹார்மோன் குறைபாட்டில் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி, குள்ளமாக இருப்பதால் ஓரங்கட்டப்பட்டவர். ஆனால் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் கால்பந்து உலகில் கோலோச்சிய மெஸ்ஸி காலத்திற்கும் சிறந்த வீரனாக தன்னை மாற்றிக்கொண்டார்.
கால்பந்து உலகில் சரித்திர நாயகனாக வலம்வந்தாலும், உலகக்கோப்பை என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்து. விரக்தியில் ஒருகட்டத்தில் ஓய்வையே அறிவித்த மெஸ்ஸி, பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்து 17 வருடங்களுக்கு பிறகு 2022 கால்பந்து உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடினார். விடாமுயற்சிக்கு தான் ஒரு சிறந்த உதாரணம் என்பதை உலகிற்கு பறைசாற்றினார்.
கால்பந்து உலகில் பல சாதனைகளை படைத்திருக்கும் மெஸ்ஸி, தற்போது புதிய உலகசாதனையை தன் பெயரில் எழுதியுள்ளார்..
மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியை முதன்முறையாக மேஜர் லீக் கால்பந்து (MLS) கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று பிரத்யேக சாதனையையு படைத்தார்.. இன்டர் மியாமி மற்றும் FC சின்சினாட்டி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஈஸ்டர்ன்ஸ் கான்பிரன்ஸ் அரையிறுதியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இன்டர் மியாமி, சின்சினாட்டியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப்போட்டியில் இன்டர் மியாமி கோல்களை அடிக்க இரண்டு அஸிஸ்ட்களை வழங்கிய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 1300 கோல்களில் பங்களித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து வரலாற்றில் தன் பெயரை பதித்தார்.. முதலிடத்தில் இருந்த ரொனால்டோவை (1298) பின்னுக்கு தள்ளினார்..
நடப்பு மேஜர் லீக் சீசனில் மட்டும் 28 போட்டிகளில் 29 கோல்களையும், 19 அஸிஸ்ட்களையும் வழங்கி சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி..