மெய்டீஸ் கொடி போர்த்திய ஜீக்சன் சிங்
மெய்டீஸ் கொடி போர்த்திய ஜீக்சன் சிங் twitter
கால்பந்து

”சண்டை வேண்டாம்; அமைதி வேண்டும்” - மைதானத்தில் மணிப்பூர் கொடியுடன் கால்பந்து வீரர்! வெடித்த சர்ச்சை!

Prakash J

14வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் மற்றும் அரை இறுதிச்சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் பெனால்டி ஷூட் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

india champion

இந்தப் போட்டிக்குப் பின்னர் மணிப்பூர் மாநிலம் தவபால் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அணியின் கால்பந்து அணி வீரரான ஜீக்சன் சிங், தேசியக் கொடிக்குப் பதிலாக ஏழு வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடியினைப் போர்த்தி இருந்தார். அந்தக் கொடியை அவர் போர்த்தியிருந்தது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கொடியானது, மணிப்பூரின் பாரம்பரிய ஏழு குலங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான, ஏழு நிறங்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அந்தக் கொடியைப் போர்த்தி இருந்ததுதான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக வன்முறையால் பற்றி எரிந்து வரும் மணிப்பூரின் கொடியை ஏந்தியபடியே வலம் வந்ததுதான் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இதுதொடர்பாக, அவரை பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். பிரிவினைவாதி, நாகரிகமற்றவர் எனக் கடுமையாக விமர்சித்திருப்பதுடன் ’இது சர்வதேச போட்டி. இத்தகைய சூழலில் இப்படி அவர் செய்திருப்பது இந்தியாவை அவமானப்படுத்துவது போன்றதாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேட்டியளித்த ஜீக்சன் சிங், “இது என் மணிப்பூர் மாநிலத்தின் கொடி. இதை, நான் விரும்பினேன். இந்திய மக்களுக்கும், மணிப்பூர் மக்களும், வன்முறையை கையிலேந்தாமல் அமைதியாகக் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தக் கொடியை நான் ஏந்தியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர், “மணிப்பூரில் என்ன நடக்கிறது? இந்தியாவிலும் மணிப்பூரிலும் உள்ள அனைவரையும் சமாதானமாக இருங்கள் என்றும் சண்டையிட வேண்டாம் என்றும் கூற விரும்புகிறேன். எனக்கு அமைதி வேண்டும். 2 மாதங்கள் ஆகியும் இன்னும் சண்டை நடந்துவருகிறது. இதுபோன்ற மோதல்கள் அதிகமாக நடைபெற நான் விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்த அமைதியைப் பெற அரசாங்கத்தின் மற்றும் பிறரின் கவனத்தை நான் கொண்டுவர விரும்புகிறேன். எனது குடும்பம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் வீடு மற்றும் அனைத்தையும் இழந்த குடும்பங்கள் ஏராளம் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

என்றாலும் அவருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுக்கத் தொடங்கியதை அடுத்து, ஜீக்சன் சிங், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் கொடியுடன் வரவில்லை. எனது மாநிலமான மணிப்பூரில் நடக்கும் பிரச்னைகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவே நான் முயன்றேன். இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “எனது சொந்த மாநிலமான மணிப்பூரில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன். அணிக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டு உள்ளார். ஜீக்சன் சிங் செய்த இந்தச் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மே 3ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரண்டு இனக் குழுக்களிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அக்குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் அமைதியைக் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஜீக்சன் சிங் செய்த செயலுக்கு கண்டனம் வலுத்துள்ளது. மெய்டீஸ் மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே அங்கு கடந்த 2 மாதங்களாக போராட்டம் வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.