மெஸ்ஸி web
கால்பந்து

Farewell போட்டி| முடிவுக்கு வருகிறதா சகாப்தம்? தாய் மண்ணில் இறுதி ஆட்டம்.. மெஸ்ஸி உருக்கம்!

கால்பந்து சூப்பர்ஸ்டார் லயனல் மெஸ்ஸி தனது தாயகமான அர்ஜென்டினாவில் தனது கடைசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியை விளையாட உள்ளார்.

Rishan Vengai

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, சொந்த மண்ணில் தன்னுடைய ஃபேர்வெல் போட்டியை விளையாடவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டு வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுவர் மெஸ்ஸி. தேசம் கடந்து பல்வேறு உலக ரசிகர்களை கொண்டிருக்கும் மெஸ்ஸி, தன்னுடைய அபாரமான கால்பந்து திறனால் பந்தைக் கட்டுப்படுத்துவதிலும், எதிரணியினரை கடந்து செல்வதிலும் தனித்துவமான திறமை கொண்டவர். அதுமட்டுமில்லாமல் கோல்களை அடிப்பதிலும், மற்றவர்களுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் வல்லவர்.

இளம் வயதில் ஹார்மோன் குறைபாட்டில் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி, குள்ளமாக இருப்பதால் ஓரங்கட்டப்பட்டவர். ஆனால் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் கால்பந்து உலகில் கோலோச்சிய மெஸ்ஸி காலத்திற்கும் சிறந்த வீரனாக தன்னை மாற்றிக்கொண்டார்.

கால்பந்து உலகில் சரித்திர நாயகனாக வலம்வந்தாலும், உலகக்கோப்பை என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்து. விரக்தியில் ஒருகட்டத்தில் ஓய்வையே அறிவித்த மெஸ்ஸி, பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்து 17 வருடங்களுக்கு பிறகு 2022 கால்பந்து உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடினார். விடாமுயற்சிக்கு தான் ஒரு சிறந்த உதாரணம் என்பதை உலகிற்கு பறைசாற்றினார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இறுதி உலகக்கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் மெஸ்ஸி, தன்னுடைய சொந்த மண்ணில் கடைசியாக உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் விளையாடவிருக்கிறார். இந்த உலகக்கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்பதால் 38 வயது மெஸ்ஸி உருக்கமாக பேசியுள்ளார்.

சொந்த மண்ணில் கடைசிப் போட்டி..

FIFA-வின் அடுத்த கால்பந்து உலகக் கோப்பை தொடரானது எதிர்வரும் 2026-ம் ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளால் நடத்தப்படவிருக்கிறது. 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளானது ஜூன் 11 முதல் தொடங்கி ஜூலை 19 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2026 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 11 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் சொந்தமண்ணில் நடக்கவிருக்கும் தகுதிச்சுற்று போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் வெனிசுவேலா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

சொந்த மண்ணில், சொந்த மக்களுக்கு முன்னிலையில் வெனிசுலா அணிக்கு எதிராக விளையாட உள்ள போட்டி தனக்கு மிகமிக சிறப்பானது என மெஸ்ஸி உருக்கமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் மெஸ்ஸி, “இது (வெனிசுலா உடனான மோதல்) எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டியாக இருக்கும். ஏனெனில் இது கடைசி தகுதிச் சுற்றுப் போட்டி. இதற்கு பிறகு இங்கு நட்பு ரீதியிலான போட்டியிலோ, மற்றபோட்டியிலோ விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை. அதனால் இந்த சிறப்பு வாய்ந்த் போட்டியில் என் மனைவி, என் குழந்தைகள், என் பெற்றோர், என் உடன்பிறந்தவர்கள் அனைவரும் என்னுடன் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

மெஸ்ஸிக்கு தற்போது 38 வயதாகிறது. அடுத்தாண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் சர்வதேச கால்பந்திலிருந்து மெஸ்ஸி விடைபெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் மண்ணில் மெஸ்ஸி ஆடும் கடைசி தகுதிச்சுற்று போட்டியை காண பெரும் கூட்டம் வரும் என்பதால் டிக்கெட் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.