Neymar Jr x page
கால்பந்து

FIFA 2026 | 981 நாட்கள் ஓய்வு.. அணிக்குத் திரும்பியபோது கண்ணீர்விட்ட நெய்மர்!

34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்காக இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 79 கோல்களுடன் அந்த நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash J

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கியபோது, ​​உணர்ச்சிவசப்பட்ட நெய்மர் ஜூனியர் கண்ணீர் சிந்தினார்.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்குநாள் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், ஸ்காட்லாந்துக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, பிரேசில் அணி ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காயம் காரணமாக 981 நாட்கள் விளையாடாமல் இருந்த நெய்மர் ஜூனியர், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில், 76-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கியபோது, ​​உணர்ச்சிவசப்பட்ட நெய்மர் ஜூனியர் கண்ணீர் சிந்தினார். அந்தத் தருணம், ஒரு சாதாரண மாற்று வீரரைக் காட்டிலும் பெரியதாக உணரப்பட்டது.

ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு கால்பந்து உலகின் இயல்பான வாரிசாகக் கருதப்பட்ட நெய்மரின் வாழ்க்கைப்பயணம், காயங்கள் காரணமாக அந்த உலகிலிருந்தே அவரை விலக்கிவைத்தது. கடந்த 2023 அக்டோபர் மாதம் உருகுவே அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின்போது நெய்மருக்கு முழங்காலில் கடுமையான தசைநார் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவைசிகிச்சை செய்துகொண்டு, ஓய்வில் இருந்தார். பின்னர், உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு ஏற்பட்ட கெண்டைக்கால் காயமும் அவரது வருகையை மேலும் தாமதப்படுத்தியது. இதனால் உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போனது.

இந்தச் சூழலில்தான் ஸ்காட்லாந்திற்கு எதிரான ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி, மத்தேயுஸ் குன்ஹாவிற்குப் பதிலாக, நெய்மர் முன்னணி வீரராகக் களமிறக்கப்பட்டார். அதைக் கண்டு பிரேசிலிய ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தை எழுப்பினர். மியாமியில் நடந்த போட்டியில் களமிறங்குவதற்காக அவர் மாற்று வீரர் இருக்கையிலிருந்து எழுந்தபோது, ​​பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் நெய்மர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு, தனது துணையான புருனா பியான்கார்டி மற்றும் நண்பர்களைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் வடித்தார்.

இதுகுறித்து அவர், "என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிகரமான நாட்களில் இதுவும் ஒன்று" என்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் போட்டி முடிந்தவடைந்த பிறகும், நெய்மரால் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும், இந்த மறுவருகையின் மூலம் நெய்மர் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். பிரேசில் அணிக்காகத் தொடர்ந்து நான்கு உலகக் கோப்பைத் தொடர்களில் (2014, 2018, 2022, மற்றும் தற்போது 2026) விளையாடிய மிகச் சில வீரர்களின் பட்டியலில் நெய்மரும் இணைந்துள்ளார். 34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்காக இதுவரை 129 போட்டிகளில் விளையாடி 79 கோல்களுடன் அந்த நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.