FIFA Women's World Cup
FIFA Women's World Cup Twitter
கால்பந்து

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: வரலாற்றில் முதன்முறையாக 3 ஆப்பிரிக்க அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி

Justindurai S

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், இந்த தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மகளிர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக 3 ஆப்பிரிக்க நாடுகள் 16 அணிகள் மோதும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதற்குமுன்பு 2019-இல் பிரான்சில் நடந்த பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய இரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FIFA Women's World Cup

நடப்பு சீசனில் மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஜாம்பியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றன, அவற்றில் மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. புவேர்ட்டோ ரிக்கோ அணியிடம் வீழ்ந்ததன் மூலம் ஜாம்பியா அணி லீக் சுற்றோடு வெளியேறியது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த நைஜீரியா அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்திருந்த தென்னாப்பிரிக்கா அணி இத்தாலியை வீழ்த்தி தகுதி பெற்றுள்ளது. அதேபோல் கொலம்பியா மற்றும் தென் கொரியாவை தோற்கடித்து மொராக்கோ அணி 'ஹெச்' பிரிவிலிருந்து முன்னேறியிருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கிறது.

FIFA Women's World Cup

லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 2-வது சுற்று போட்டிகள் இன்று (ஆக.5) முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், நார்வே, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

2-வது சுற்றில் (ரவுண்ட் 16) தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்தையும், மொராக்கோ அணி பிரான்சையும், நைஜீரியா அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சுவிட்சர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.