egypt football team எக்ஸ் தளம்
கால்பந்து

FIFA 2026 | 92 ஆண்டுகால கனவு.. முகமது சாலா அடித்த கோல்.. WC-இல் எகிப்துக்கு முதல் வெற்றி!

இந்த வெற்றியானது, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான எகிப்தின் நம்பிக்கையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பல தலைமுறைகளாக நீடித்திருந்த காத்திருப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

Prakash J

உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், 'ஃபேரோஸ்' என்று அழைக்கப்படும் எகிப்து அணி, 92 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்தது.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்குநாள் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 21) நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், 'ஃபேரோஸ்' என்று அழைக்கப்படும் எகிப்து அணி, 92 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்தது.

1934ஆம் ஆண்டு தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய எகிப்து அணிக்கு, கால்பந்துக்கென ஒரு தனித்துவமான இடம் உண்டு என்றாலும், உலகக் கோப்பை வெற்றி என்பது நீண்டகாலமாக எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இன்னும் சொல்லப்போனால், உலகக்கோப்பையில் விளையாடிய முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு எகிப்து ஆகும்.

இந்த நிலையில்தான், கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற குரூப் ஜி (Group G) போட்டியில் நியூசிலாந்து அணியை எகிப்து நேற்று எதிர்கொண்டது. ஆட்டத்தின் 15-ஆவது நிமிடத்திலேயே நியூசிலாந்து அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய எகிப்து அணி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து அசத்தியது. முஸ்தபா ஜிகோ, தனது முதல் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அடுத்து, எகிப்தின் கால்பந்து ஜாம்பவானான முகமது சாலா, இந்த முக்கியமான போட்டியில், 67-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இது அவரது 68-ஆவது சர்வதேச கோல் ஆகும். 2018 உலகக்கோப்பைக்கு பிறகு அவர் உலகக்கோப்பையில் பதிவு செய்யும் முதல் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், திரெசெகுயே 82-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம், உலகக்கோப்பையில் எகிப்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக, பெல்ஜியத்துடன் 1-1 என்ற கணக்கில் தொடக்க ஆட்டத்தை சமன் செய்ததைத் தொடர்ந்து, இந்த வெற்றியின் மூலம் எகிப்து இரண்டு போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளுடன் 'ஜி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்த வெற்றியானது, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான எகிப்தின் நம்பிக்கையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பல தலைமுறைகளாக நீடித்திருந்த காத்திருப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.