கால்பந்து வரலாற்றின் இரு மாபெரும் நாயகர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ ஒரே அணியில் விளையாடும் அதிசயம் நனவாகலாம் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாயகன் கார்லோஸ் டெவெஸ், தனது பிரியாவிடை போட்டியை 2026 டிசம்பரில் போகா ஜூனியர்ஸ் அணிக்காக நடத்த திட்டமிட்டு, இருவரையும் ஒன்றிணைக்க தனிப்பட்ட முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார்.
நவீன கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்களாக வலம்வருபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி. கால்பந்து கிரிக்கெட்டின் வரலாற்றில் தலைசிறந்த 2 வீரர்கள் என போற்றப்படும் இவ்விருவருக்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போதும் எதிரெதிர் துருவமாகவே இருந்துள்ள இவர்களின் கால்பந்து பயணம் பல்வேறு சவால்களை கடந்தது. அத்தனை சவால்களுக்கு பிறகும் தங்களுடைய திறமையை மெருகேற்றி கொண்ட இவ்விரு ஜாம்பவான்களும் தங்களுடைய இடத்தை கடைசிவரை விட்டுக்கொடுக்கவில்லை. தொழில்முறை வாழ்க்கை முழுவதும் எதிரெதிர் அணிகளுக்காகவே விளையாடிருக்கும் இவர்கள், ஒருமுறை கூட சேர்ந்து விளையாடியதில்லை.
அவர்களுடைய கால்பந்து வாழ்க்கையில் 978, 927 என கிட்டத்தட்ட 2000 கோல்களை அடித்திருக்கும் இந்த மாயாஜால வீரர்கள் ஒருமுறையாவது சேர்ந்து விளையாட மாட்டார்களா? சேர்ந்து விளையாடினால் எப்படி இருக்கும்? என நினைக்காத கால்பந்து ரசிகர்களே இல்லை. 36 முறை இவ்விரும் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில் 22 கோல்கள், 21 கோல்கள் என சரிக்கு சமமாக மல்லுக்கட்டியுள்ளனர்.
இந்தசூழலில் தான் கால்பந்து விளையாட்டின் அதிசயமாக, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வெளியாகியிருக்கும் தகவலின் படி, மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் முன்னாள் சக வீரரான கார்லோஸ் டெவெஸ் தன்னுடைய கடைசி பிரியாவிடை போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி தொழில்முறை ஆட்டத்தை விளையாடிய 42 வயதான டெவெஸ், தனது இளமைக்கால அர்ஜென்டினா கிளப்பான போகா ஜூனியர்ஸில் ஒரு பிரியாவிடை ஆட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
வரும் டிசம்பரில் சுமார் 60 தலைசிறந்த கால்பந்து வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரு பிரியாவிடைப் போட்டியை நடத்த திட்டமிட்டிருக்கும் டெவெஸ், அதில் மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் ஒன்றிணைப்போம் என்றும், நானே தனிப்பட்ட முறையில் சென்று ரொனால்டோவை அர்ஜெண்டினாவிற்கு அழைத்து வருவேன் என்றும் கூறியுள்ளார். சர்வதேச அர்ஜெண்டினா அணியில் மெஸ்ஸியின் சகவீரராக விளையாடியிருக்கும் கார்லோஸ் டெவெஸ், 2007 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ரொனால்டோ உடன் சகவீரராக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..