விளையாட்டு

கால்பந்து காதல் நகரம் பார்சிலோனாவில் முதல் கிரிக்கெட் மைதானம்! - சுவாரஸ்ய பின்னணி

கால்பந்து காதல் நகரம் பார்சிலோனாவில் முதல் கிரிக்கெட் மைதானம்! - சுவாரஸ்ய பின்னணி

நிவேதா ஜெகராஜா

கால்பந்து மீது தீராக் காதல் கொண்ட நகரமான பார்சிலோனாவில் விரைவில் கிரிக்கெட் மைதானம் உருவாகவுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய நிகழ்வு குறித்து பார்ப்போம்.

கால்பந்துக்கு பெயர் பெற்ற நகரம், ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா. உண்மையில், 'பார்சிலோனா' என்றவுடன் எந்த விளையாட்டு ரசிகரின் மனதிலும் வரும் முதல் விஷயம் கால்பந்து அல்லது லியோனல் மெஸ்ஸி தான். இப்படி கால்பந்து விளையாட்டை வெறித்தனமாக நேசிக்கும் பார்சிலோனா விரைவில் சொந்த கிரிக்கெட் மைதானத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தப்படுவதன் தொடர்ச்சியாக கிரிக்கெட் மைதானம் ரெடியாகி வருகிறது. பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானம் சாத்தியமானதில் இருக்கும் பின்னணி சற்று சுவாரஸ்யம் மிகுந்தது.

ஆம், அதன் பின்னணியில் இருப்பது பெண்கள் என்பதுதான் இந்த விஷயத்தில் இருக்கும் சுவாரஸ்யம். சமீபத்தில் பார்சிலோனா அரசு தனது மக்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. சைக்கிளிங் விளையாட்டுக்கான லேன்கள் முதல் பல்வேறு விதமான மைதானங்கள் வரை எந்த விளையாட்டு வசதியாக கட்டமைப்புகளைக் கொண்டுவரலாம் என்பது தொடர்பாக தேர்ந்தெடுக்கவே அந்த வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு வசதியை அல்லது மைதானத்தை ஏற்படுத்த மிகப்பெரிய தொகை ஒன்றையும் அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, 822 விதமான விளையாட்டு வசதிகள் கொண்ட பட்டியலில், கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள். இதனால் கிரிக்கெட் விளையாட்டுக்காக 30 மில்லியன் யூரோ மதிப்புள்ள நிதி ஒதுக்கப்பட இருக்கிறது.

நாம் ஏற்கெனவே சொன்னது போல மக்கள் இந்த முடிவுக்குவர காரணமாக இருந்தது இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள்தானோம். அவர்கள் எடுத்த முயற்சியின் பலனாக தற்போது பார்சிலோனாவில் கிரிக்கெட் விளையாட்டு மிகப்பெரிய அளவில் விளையாடப்பட இருக்கிறது.

இதற்கு காரணமாக இருந்த பெண்களில் ஒருவரான 20 வயதுடைய ஹிஃப்ஸா பட் (Hifsa Butt) என்பவர் இது தொடர்பாக பேசும்போது, "இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதற்கு வித்திட்டவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். அவர்தான், `பள்ளியில் தொடங்க இருக்கும் கிரிக்கெட் கிளப்பில் சேருவதற்கு அவர் அழைப்பு விடுத்தபோதுதான் இவை ஆரம்பித்தது" என்று கூறினார். இப்படி ஆரம்பித்த பயணம், தற்போது கிரிக்கெட் மைதானம் கட்டும் அளவுக்கு வந்துள்ளது.

ஆனால், இதில் ஒரு சிக்கலும் உள்ளது. பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அளவுக்கு 16,000 சதுர அடிகள் கொண்ட தட்டையான இடம் கிடைப்பது கொஞ்சம் அரிதான காரியம் என்கிறார்கள். எனினும் தற்போது, பார்சிலோனாவின் மன்ட்ஜூவக் (Montjuic) என்ற மலைப்பகுதியின் மேல் இருக்கும் ஜூலியா டி கேப்மெனி (Julia de Capmany) என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு பரிசீலித்து வருகிறது எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மைதானம் அமையவிருக்கும் நிலையில், அந்நாட்டு பெண்கள் பேஸ்பால் மைதானங்களில் டென்னிஸ் பால்களை வைத்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் மைதானங்கள் இல்லாத நிலையில் இவர்கள் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக இப்படி பேஸ்பால் மைதானங்களில் பயிற்சி எடுத்து வருகிறார். பேஸ்பால் சீசன் நாட்களில் மற்ற உள்ளரங்குகளில் தங்கள் கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்துள்ளனர் என்பது அவர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை வெளிக்கொணரும்விதமாக அமைந்துள்ளது.