வரும் சனிக்கிழமை அன்று துபாயில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு பேட்ஸ்மேனாக தோனி செய்த தரமான 5 சம்பவங்கள் குறித்த ரீவைண்ட்.
சம்பவம் 1 : 54 ரன்கள் (29 பந்துகள்) VS கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 2010
தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 193 ரன்களை சேஸ் செய்து வென்றிருக்கும். அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது தோனியின் ஆட்டம்.
29 பந்துகளில் 54 ரன்களை விளாசியிருப்பர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட ஒரு பவுண்டரியும், இரண்டு சிக்ஸரும் அடித்திருப்பார் தோனி.
சம்பவம் 2 : 51 ரன்கள் (20 பந்துகள்) VS மும்பை இந்தியன்ஸ் : 2012
மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆறு பவுண்டரிகளையும், இரண்டு சிக்ஸர்களையும் அடித்து சென்னை அணியை குவாலிபயர் சுற்றுக்கு முன்னேற செய்திருப்பார் தோனி . சென்னை அணி அந்த போட்டியில் 187 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
சம்பவம் 3 : 64 ரன்கள் (49 பந்துகள்) VS கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 2016
மேட்ச் பிக்சிங் சர்ச்சையால் சென்னை அணி விளையாட தடைவிதிக்கப்பட்ட நிலையில் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக அட்டகாசமான இன்னிங்க்ஸை ஆடினார் தோனி.
கடைசி ஓவரில் புனே அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் நான்கு பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்திருக்கும் புனே அணி. கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவைப்பட அக்சர் பட்டேலின் சுழற் பந்து வீச்சில் இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து புனேவை வெற்றிபெற செய்தார் தோனி.
சம்பவம் 4 : 70 ரன்கள் (34 பந்துகள்) VS ஆர்.சி.பி : 2018
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை அணி ஆர்.சி.பி செட் செய்த 206 ரன்களை விரட்டிய போது தோனி 34 பந்துகளில் 70 ரன்களை குவித்திருந்தார். கடைசி மூன்று ஓவரில் 45 ரன்கள் சென்னை அணிக்கு தேவைப்பட வீக்கான பவுலர்களான முகமது சிராஜ் மற்றும் கோரி ஆண்டர்சனை டார்கெட் செய்து வழக்கம் போல சென்னை அணியை வெற்றி பெற செய்திருப்பார்.
சம்பவம் 5 : 75 ரன்கள் (46 பந்துகள்) VS ராஜஸ்தான் ராயல்ஸ் : 2019
சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அடித்து மெர்சல் காட்டியிருப்பார் தோனி. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 175 ரன்களை விரட்ட முடியாமல் தோல்வியை தழுவியிருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறந்த பினிஷராக பார்க்கப்படுகிறார். சென்னை அணிக்காக 2020 ஐபிஎல் தொடரிலும் இதே போல தரமான சம்பவத்தை அவர் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி முதல் போட்டியில் மும்பையோடு விளையாட உள்ளது.