இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தூரில் நடைபெறும் இந்தப்போட்டி மதியம் ஒன்றரை மணயளவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஹில்டன் கார்ட்ரைட்டுக்கு பதிலாக, ஆரோன் பிஞ்ச் ஓபங்கிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என தெரிகிறது.
இதுபற்றி ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர் கூறும்போது, ’காயம் காரணமாக, கடந்த போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆரோன் பிஞ்ச் இந்த போட்டியில் ஆடுவார் என நினைக்கிறேன். வலைப்பயிற்சியில் தீவிரமாக அவர் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தேன். அவர் சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு அதிக அனுபவம் இருக்கிறது. ஆக்ரோஷமாக ஆடும் அவர் வருவது அணிக்கு பலமாக இருக்கும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறிவருகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. சில ஆட்டங்களில் அப்படி இருக்கலாம். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழும்போது அழுத்தம் இருக்கும். ஆனால், நல்ல தொடக்கம் அமைந்துவிட்டால், போட்டியின் தன்மையே மாறிவிடும். சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வது எளிதாகிவிடும்’ என்றார்.