விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் மதுபான விற்பனைக்கு திடீர் தடை

JustinDurai

உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் மதுபானம் விற்பனை செய்ய ஃபிஃபா தடை விதித்துள்ளது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர், ரசிகைகளும் குவியத் தொடங்கி விட்டனர். வழக்கமாக உலகக் கோப்பை போட்டி மைதானங்களில் ரசிகர்கள் மது பானங்களுடன் வலம் வருவதை பார்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய நாடான கத்தாரில் மது அருந்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. அங்கு பொது இடங்களில் மது அருந்த யாருக்கும் அனுமதி கிடையாது. உயர்தர ஹோட்டல்களில் தான் மது விற்பனை செய்யப்படும்.


உலகக் கோப்பை போட்டியை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு வசதியாக மைதானங்களில் குறிப்பிட்ட இடங்களில் மது விற்பனை நடைபெறும் என்று முதலில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது போட்டி நடைபெறும் மைதானங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் (ஃபிஃபா) திடீரென தடை விதித்துள்ளது. இது குறித்து ஃபிஃபா தனது ட்விட்டர் பதிவில், ' மைதானம்  மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஆல்கஹால் கலந்த பீர் விற்பனை மையங்கள் அகற்றப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபிஃபாவின் இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ள Budweiser

உலகக் கோப்பையின் ஸ்பான்சராக உள்ள பட்வைசர் நிறுவனம் ஃபிஃபாவின் இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ரசிகர்கள் ஸ்டேடியங்களில் பீர் அருந்தியபடியே போட்டிகளை கண்டு ரசிக்கலாம். எனவே மேற்கத்திய ரசிகர்கள் இதுமாதிரியான கட்டுப்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளனர்

இதையும் படிக்கலாமே: கிரிக்கெட் இல்லனா என்ன? வாங்க 'ஃபுட்பால்' விளையாடலாம்: இந்தியா-நியூசிலாந்து வீரர்கள் ஜாலி