விறுவிறுப்பு நிறைந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ள அணிகள் குறித்து பார்க்கலாம்.
இன்று நடைபெறும் முதல் காலிறுதியாட்டத்தில் உருகுவே அணி, பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ரஷ்யாவின் நிஸ்னி நோவ்குரோட் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது.
பிரான்ஸ் அணி சர்வதேச தரநிலையில் ஏழாவது இடத்தில் உள்ளது. உருகுவே அணி 14 ஆவது இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் 7 போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன. இதில் உருகுவே அணி 2 போட்டிகளிலும், பிரான்ஸ் அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. நான்கு போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.
இன்று நடைபெறும் மற்றொரு காலிறுதியாட்டத்தில் பிரேசில் அணி, பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ரஷ்யாவின் கசன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது.
சர்வதேச தரநிலையில் பிரேசில் அணி இரண்டாவது இடத்திலும், பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பிரேசில் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. 3 போட்டிகளில் பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் பெல்ஜியம் அணி வென்றுள்ளது.
நாளை நடைபெறும் காலிறுதியாட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி ஸ்வீடனை எதிர்த்து விளையாடுகிறது. சமரா நகரில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது. சர்வதேச தரநிலையில் இங்கிலாந்து அணி 12 ஆவது இடத்திலும், ஸ்வீடன் அணி 24 ஆவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 8 போட்டிகளிலும், ஸ்வீடன் அணி 7 போட்டிகளிலும் விளையாடியுள்ளன. 9 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
நாளை நடைபெறும் இரண்டாவது காலிறுதியாட்டத்தில் ரஷ்ய அணி, குரேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
தரநிலையில் குரேயேஷிய அணி இருபதாவது இடத்திலும், ரஷ்ய அணி எழுபதாவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. இதில் குரேஷிய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
காலிறுதியாட்டம்
உருகுவே vs பிரான்ஸ்
இடம்: நிஸ்னி நோவ்குரோட்
நேரம்: இரவு 7.30
பிரேசில் vs பெல்ஜியம்
இடம்: கசன்
நேரம்: இரவு 11.30
நாளைய போட்டி;
ஸ்வீடன் vs இங்கிலாந்து
இடம்: சமரா
நேரம்: இரவு 7.30
ரஷ்யா vs குரேஷியா
இடம்: சோச்சி
நேரம்: இரவு 11.30