விளையாட்டு

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா!

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா!

webteam

உலகம் முழுவதிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி உள்ளது.

உலகில் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. கத்தார் நாடு முழுவதும் கால்பந்து கோலாகலம் பரவி உள்ளது. பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். திரும்பிய இடமெல்லாம் ரசிகர்களின் தலைகளாகவே தென்படுகின்றன.

கோடானு கோடி கால்பந்து ரசிகர்களின் பேரார்வத்திற்கு விருந்து படைக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், A குரூப்பில் இடம்பெற்றுள்ள கத்தார் - ஈகுவடார் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி அல் ரயான் நகரில் உள்ள  அல் பயத் அரங்கில் 9.30 மணிக்கு தொடங்கியது.  தரவரிசையில் 50ஆவது இடத்தில் இருக்கும் கத்தாரும், 44ஆவது இடத்தில் உள்ள ஈகுவடாரும் தங்களது முதல் போட்டியில் எப்படியேனும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்புடன் களம் இறங்கி உள்ளன.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக அடியெடுத்து வைத்த ஈகுவடார், அடுத்த உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்று வரை முன்னேறியது. கத்தார் அணியைப் பொறுத்த வரையில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் உடனான நட்பு ரீதியிலான ஆட்டங்களில் வென்று தன்னம்பிக்கை பெற்றுள்ளது. அதனால் இன்றைய ஆட்டத்தில முத்திரை பதிக்கும் நோக்கில் கத்தார் அணி களம் காணும் என பயிற்சியாளர் பிளீக்ஸ் சாஞ்செஸ் தெரிவித்துள்ளார்