ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரஹானே வகுத்த வியூகங்கள் வியப்பில் ஆழ்த்தின.
பாக்சிங் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்த்து மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், புத்துணர்ச்சியோடு இந்த இரண்டாவது போட்டியில் மீண்டெழுந்துள்ளது இந்தியா.
கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், கோலி இந்தியா திரும்பியுள்ளார். அதனால் ரஹானே இந்தப் போட்டி உட்பட எஞ்சியுள்ள போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.
டாஸை இழந்த நிலையில், சாந்தமாக தனது திட்டங்களை பவுலிங்கின்போது அப்ளை செய்ய தொடங்கினார் ரஹானே. முதல் பத்து ஓவர்களை உமேஷ் யாதவ் மற்றும் பும்ராவை பயன்படுத்தினார். அதில் பும்ரா பேரன்ஸை டக் அவுட் செய்ததும் குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 11வது ஓவரிலேயே அஷ்வினை பந்து வீச பணித்தார் ரஹானே. அது எல்லோருக்குமே சர்ப்ரைஸாக இருந்தது.
அஷ்வின் முதல் ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மீது பிரஷர் போட்டார். தொடர்ந்து 13வது ஓவரில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த மேத்யூ வேடை அஷ்வின் காலி செய்தார். அதற்கடுத்த 15வது ஓவரில் ஸ்மித்தை டக் அவுட் செய்தார் அஷ்வின். இதில் கேப்டன் ரஹானேவின் பங்கு என்னவென்றால், லெக் ஸ்லிப்பை பயன்படுத்தியதுதான்.
அதேபோல நிலைத்து நின்று விளையாடிய மார்னஸ் லாபிஷேனை சிராஜ் மூலம் ஸ்கொயர் லெக் ஃபீல்டர் மூலம் வெளியேற்றினார் கேப்டன் ரஹானே. களத்தில் அணியின் வியூகங்களை சிறப்பாக அப்ளை செய்ததோடு சுழற்சி முறையில் பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். அஷ்வின் மட்டுமே தொடர்ந்து 12 ஓவர்களை ஒரே ஸ்பெல்லில் வீசினார். மேலும் DRS ஆப்ஷனையும் ஆழமாக யோசித்த பிறகே எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் அசத்தலான ஆட்டத்திற்கு கேப்டன் ரஹானேவின் கேப்டன்சியே காரணம். அவரை ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.