விளையாட்டு

விஸ்வரூபம் எடுக்கும் கோலியின் 'Fake Fielding' விவகாரம்: ஐசிசி விதிமுறை கூறுவது என்ன?

JustinDurai

ஐசிசி விதிப்படி, பேட்ஸ்மேன் ரன் ஓடும்போது, ஃபீல்டர்கள் பேச்சு அல்லது சைகை மூலம்திசை திருப்பும் வகையில் நடந்து கொள்வது குற்றமாகும்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தின்போது இந்திய வீரர் விராட் கோலி Fake Fielding (ஃபேக் ஃபீல்டிங்) எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் வீசிய 7வது ஓவரில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது. ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, அவர் பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், விக்கெட் கீப்பரிடம் 'த்ரோ' செய்வது போலவும் பாவனை செய்தார். அந்த நேரத்தில் கள நடுவர்கள் இதைக் கவனிக்கவில்லை. இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. விராட் கோலி இப்படி செய்தது ஐசிசியின் 41.5-வது விதிமுறைக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விதிகளைக் குறிப்பிட்டு பலர் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். களத்தில் திசை திருப்புதல் நடந்துள்ளது. நடுவர்கள் சரியான முடிவு எடுக்காமல் இருந்தது ஏற்புடையது அல்ல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக சொல்லப்படும் இந்த விவகாரத்தை, போட்டி முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இதற்கு தண்டனையாக, எங்கள் அணிக்கு 5 ரன்கள் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்றார். ஒருவேளை இதற்கு தண்டனையாக 5 ரன்கள் வழங்கப்பட்டு இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும். ஏனெனில் இந்த போட்டியில் வங்களாதேச அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி விதிமுறை கூறுவது என்ன?

ஐசிசி விதி 41.5.1-படி ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது, பீல்டர்கள் பேச்சு அல்லது சைகை மூலம் பேட்ஸ்மேனை திசை திருப்புவது போன்றவை தவறாகும். அதற்கு தண்டனையாக பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும். திசை திருப்புதல் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து நடுவர் மட்டுமே தீர்மானித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஐசிசி விதி கூறுகிறது. ஆனால் நடுவர்கள் இதை கவனிக்காததால் களத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையும் படிக்கலாமே: Fake Fielding விவகாரம்... யார் பக்கம் தவறு? வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொல்லும் விளக்கம்!