‘ஒவ்வொரு செஞ்சுரியும் ஸ்பெஷல் என்பதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
நியூசிலாந்து அணியுடனான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா நேற்று வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் விராத் கோலி 113 ரன்களும், துணைக் கேப்டன் ரோகித் சர்மா 147 ரன்களும் குவித்தனர். ரோகித்துக்கு இது 15-வது சதம். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பிறகு ரோகித் கூறும்போது, ’அணி வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு எனது பங்களிப்பும் சிறப்பாக இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி. இந்த தொடர் முழுவதும் நாங்கள் நன்றாக விளையாடினோம். நியூசிலாந்து அணி எங்களுக்கு சவாலானதாக இருந்தது. எளிதாக நாங்கள் வெற்றிபெற அந்த அணி விடவில்லை. கான்பூர் போட்டியில் நான் ரசித்து ஆடினேன். தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பான நினைவுகள் வந்தன (இதே மைதானத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 150 ரன்கள் குவித்திருந்தார் ரோகித்). ஒவ்வொரு செஞ்சுரியும் ஸ்பெஷலானதுதான். ஆனால் கடுமையான பயிற்சிக்கு பின் இந்த சதம் கிடைத்ததால் எனக்கு மகிழ்ச்சி. என் பேட்டிங் வலுப்பெற பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் ஆலோசனையும் பங்களிப்பு உதவியாக இருந்தது’ என்றார்.