விளையாட்டு

"ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அணிகளை களமிறக்கலாம்"- இயான் மார்கன் !

jagadeesh

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தால், ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அணிகளை களமிறக்கி போட்டிகளில் விளையாட செய்யலாம் என அந்த அணியின் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, இங்கிலாந்து நாட்டில் வரும் மே 28 ஆம் வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால், இங்கிலாந்தில் உள்ளூர் சீசன் முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதனால், ஜுன் மாதத்தில், மேற்கிந்திய தீவுகள் அல்லது பாகிஸ்தான் அணிகளுடன் ஜோ ரூட் தலைமையிலான டெஸ்ட் அணியும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் தனது தலைமையிலான மற்றொரு இங்கிலாந்து அணியும் ஒரே நேரத்தில் விளையாடலாம் என்ற யோசனையை இயான் மார்கன் முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை வாங்க நிதி திரட்டும் நடவடிக்கையில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இறங்கியுள்ளார். அதன்படி, தான் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாகவும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை முழுவதும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை, மறுபதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், சுரேஷ் ரெய்னா ஆகியோரை பட்லர் கேட்டுக் கொண்டுள்ளார்.