விளையாட்டு

இந்திய பந்துவீச்சை தெறிக்க விட்ட பேரிஸ்டோவ், ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து அபார வெற்றி

Sinekadhara

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேரிஸ்டோவ், பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் 108 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். விராட் கோலியும் நிதானமாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யாவும் 16 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணியில் தொடக்க வீரர்களான ஜேஸன் ராய், பேரிஸ்டோவ் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். ராய் தொடக்கத்தில் அதிரடியாக ஆட அவருக்கு பேரிஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் பேரிஸ்டோவும் வான வேடிக்கை காட்டினார். ராய் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வந்தது முதலே சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார்.

சதம் அடித்த பேரிஸ்டோவ் 112 பந்துகளில் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 7 சிக்ஸர், 11 பவுண்டரிகள் விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு ரன்னில் அவர் சதத்தை நழுவவிட்டார். அவர் 10 சிக்ஸர்களை விளாசி இருந்தார். ஜோஸ் பட்லர் வந்த வேகத்தில் டக் அவுட் ஆக இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன் எடுத்து 39 பந்துகள் மீதமிருக்க அபார வெற்றி பெற்றது.