இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், இரண்டாவது பந்திலேயே ஜெமிமா ரோட்ரிகுயஸு விக்கெட்டை பறிக்கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மந்தனாவும் பூணம் ராவுத்தும் சிறப்பாக விளையாடினர். மந்தனா 66 ரன்களும், பூணம் ராவுத் 56 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேத்ரீன் பிரன்ட் 5 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர், 206 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து மகளிர் அணி தொடக்கத்தில் 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் ஹீதர் நைட் மற்றும் டெனியெல்லா வயாட்( Danielle Wyatt) அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் டெனியெல்லா 56, நைட் 47 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிப் பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஏற்கெனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டியை வென்றிருந்த இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய மந்தனா தொடர்நாயகி விருதை தட்டிசென்றார். இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையேயான டி20 தொடர் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.