மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் சிறப்பான பந்து வீச்சும், ஜோ ரூட், மோர்கன் ஜோடியின் 188 ரன் பார்ட்னர்ஷிப்பும் தான் காரணம்.
இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருந்து இந்திய வீரர்கள் டிரெஸ்சிங் ரூம்க்கு சென்றார்கள். அப்போது, முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி நடுவரிடம் இருந்து பந்தினை வாங்கினார். இதனை ரசிகர்கள் எப்படியோ கவனித்துவிட்டார்கள். நடுவரிடம் இருந்து தோனி பந்தினை வாங்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆனது. அதாவது, தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பதற்கான சிக்னல் தான் இது என்று ரசிகர்கள் கணித்துவிட்டார்கள்.
அவர்கள் கணிப்பதற்கு முன் உதாரணமும் இல்லாமல் இல்லை. அதாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிடும் முன்னர் தனது கடைசி போட்டியில் நடுவர்களிடம் இருந்து தோனி ஸ்டம்ஸை வாங்கினார். 2014 ஆம் ஆண்டு தான் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திடீரென ஓய்வை அறிவித்தார். அத்துடன் ஒப்பிட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோனி பெரிதாக ரன் அடிக்கவில்லை. முதல் போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடிய தோனி முறையே 37, 42 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு போட்டியிலும் அவர் மிகவும் மந்தமாக விளையாடியதாகவும், பந்துகளை அதிகம் வீணடித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தோனி தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பேசப்பட்டது.