காயத்திற்கு பிறகு ஆஷஸ் தொடரில் பங்கேற்ற ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனுமான ஸ்மித். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 144 (219) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 142 (207) என பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 (161) ரன்கள் எடுத்து மீண்டும் இங்கிலாந்து நெருக்கடி கொடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் தலையில் காயம்பட்டு விளையாட முடியாத நிலையை அடைந்தார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்னஸ் அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. ஓய்விற்கு பின்னர் மீண்டும் களமிறங்கினார் ஸ்மித். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்கஸ் ஹாரிஸ் 13 (24) மற்றும் டேவிட் வார்னர் 0 (2) என விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மார்னஸ் மற்றும் ஸ்மித் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அரை சதத்தை கடந்த மார்னஸ் 67 (128) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.
அதன்பின்னர் பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினாலும், ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து இன்னும் போராடி வருகிறது. 143 (217) ரன்களுடன் களத்தில் இருக்கும் ஸ்மித், இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார்.