Jofra Archer has exposed Suryavanshi's weakness Suryavanshi's Carrier
விளையாட்டு

தொடங்கிவைத்த ஜோப்ரா ஆர்ச்சர்.. அம்பலமான சூர்யவன்ஷியின் பலவீனம் : மீண்டு வருவாரா இளம் வீரர்?

சூர்யவன்ஷியின் பலவீனத்தை இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அம்பலப்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Praveen Joshva L

12 வயதிலேயே பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, 13 வயதிலேயே ஐபிஎல் அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் விளையாடிய அதிரடி ஆட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர், உலகின் அத்தனை முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிதறடித்து அசத்தினார். கடந்த ஐபிஎல் தொடரில் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 37 பந்துகளில் அவர் சதமடித்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

மேலும் அந்த ஐபிஎல் தொடரில் அசுர பார்மில் இருந்த அவர் ராஜஸ்தான் அணியை கிட்டத்தட்ட தனியாளாக தன் தோளில் சுமந்து அணியை பிளே ஆஃப் தொடருக்கு கொண்டுவந்தார். அதோடு இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் வசப்படுத்தினார்.

அவரின் இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்கவில்லை என்றாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களமிறங்கி இந்தியாவுக்காக களமிறங்கிய இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த அவர், 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது, நான்காவது டி20 போட்டியிலும் அவர் அணியில் இடம்பிடித்த நிலையில், அந்த போட்டிகளிலும் 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று போட்டிகளிலும் அவர் ஷார்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்த நிலையில், அதில் இரு முறை ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்திய A அணிக்காக சூர்யவன்ஷி ஆடியபோதும் அங்கும் ஷார்ட் பந்துவீச்சில் திணறி ஆட்டமிழந்தார். அந்த வகையில் தற்போது ஜோப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் பால் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் இந்த பலவீனத்தை எதிரணிக்கு தெரிந்துகொண்டு அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற பந்துகளை வீசுவார்கள் என்பதால், விரைவில் தனது இந்த ஷார்ட் பால் பலவீனத்தை சூர்யவன்ஷி சரிசெய்யவேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.