விளையாட்டு

மறக்க முடியாத நாட்டிங்ஹாம் மைதானம் - இந்தியாவை மிரள வைக்குமா இங்கிலாந்து

webteam

நாட்டிங்ஹாம் மைதானத்தில் இங்கிலாந்து அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நாட்டிங்ஹாம் மைதானத்தில் இங்கிலாந்து அணி அதிக ஸ்கோரை எளிதில் எட்டும். தன்னுடைய சாதனை ஸ்கோரான 481 ரன்களை இந்த மைதானத்தில் தான் அந்த அணி பதிவு செய்தது. 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தான் இங்கிலாந்து அணி இந்த ஸ்கோரை எடுத்தது. அந்தப் போட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். பையர்ஸ்டோவ் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. 

அதேபோல், 2016ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹால்ஸ் 122 பந்துகளில் 171 ரன் குவித்தார். ஆனால், இந்திய அணிக்கு எதிராக 281 ரன் எடுத்தது தான் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சம். அதேபோல், 2004ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 147 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர்.

இந்நிலையில், இன்றையப் போட்டியிலும் இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபடும் என்று தெரிகிறது. இருப்பினும், அந்த இரண்டுப் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய அலெக்ஸ் ஹால்ஸ் இன்றையப் போட்டியில் இல்லை.