43 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற உலக சாம்பியன்ஸ் ஸ்பெய்ன் அணியை, UEFA Nations League போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி, உலக சாதனை ஓட்டத்தை நிறுத்தியது. ஹாரி கேனின் பெனால்டி மற்றும் அட்டகாசமான ஆட்டத்தால், த்ரீ லயன்ஸ் அணி ஸ்பெய்னின் ஆதிக்கத்தை முறியடித்தது.
UEFA Nations League தொடரில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி ஒரு ரோலர் கோஸ்டர் த்ரில்லராக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கு பிறகு கொலம்பியாவிடம் தோற்றதிலிருந்து 2 ஆண்டுகளாக உலகக்கால்பந்தை ஆதிக்கம் செலுத்திவரும் ஸ்பெய்ன் அணி 43 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று அசைக்க முடியாத அணியாக வலம்வந்தது. ஆனால் உலகக்கோப்பை வென்ற ஸ்பெய்ன் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்து 43 தொடர்வெற்றி என்ற உலகசாதனை ஓட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது த்ரீ லயன்ஸ் அணி.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிடில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல்பாதி முழுவதும் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 45-வது நிமிடத்தில் பாவ் குபார்சி செய்த ஃபவுலை பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் பெனால்டியை கோலாக மாற்றி ஸ்பெய்ன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் 53வது நிமிடம், 57வது நிமிடங்கள் என கண் இமைப்பதற்குள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்த இங்கிலாந்து அணி 3-0 என லீட் எடுத்து உலக சாம்பியனான ஸ்பெய்ன் அணியை திகைக்க வைத்தது.
இரண்டாவது பாதியில் ஸ்பெய்ன் அணி தங்களுடைய கோல்கணக்கை தொடங்க தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் எலியட் ஆண்டர்சன், லமின் யமாலைப் பின்னுக்கு இழுத்ததால் சிவப்பு அட்டை பெற்று ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ஸ்பெயினுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பை வழங்கியது. அதைப்பயன்படுத்திக்கொண்ட ஸ்பெய்ன் கோலாக மாற்றி அசத்தியது.
தொடர்ந்து 75-வது நிமிடத்தில் யமால் கொடுத்த கிராஸிலிருந்து மாற்று வீரரான நிக்கோ வில்லியம்ஸ் கோல் அடித்து, கோல் வித்தியாசத்தை ஒன்றாக்கினார். 3-2 என ஆட்டம் கடைசிநேரத்தில் விறுவிறுப்பை தொற்றவைக்க, கடைசி 15 நிமிடத்தில் ஸ்பெய்ன் தாக்குதல் நடத்திய 2 வெற்றிகரமான ஷாட்களை தடுத்து நிறுத்தினார் கோல்கீப்பர் ஜேம்ஸ் டிராஃபோர்ட். இங்கிலாந்து கீப்பரின் அட்டகாசமான தடுப்பாட்டத்தால் கடைசிவரை போராடிய ஸ்பெய்ன் அணியால் 3வது கோலை அடிக்க முடியவில்லை.
முடிவில் 43 போட்டிகளாக தோல்வியே காணாத ஸ்பெய்ன் அணியின் வெற்றி ஓட்டத்தை தடுத்து நிறுத்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது ஹாரி கேனின் இங்கிலாந்து. தோல்விக்கு பின் ஸ்பெயின் வீரர்கள் இங்கிலாந்து வீரர்களிடம் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகமானது.