மகளிர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை பூனம் ராவத் 86 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, கடைசி 8 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு இழந்தது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலாந்து வீராங்கனை ஸ்ருப்சோல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.