வரும் சனிக்கிழமை அன்று (செப்.19) துபாயில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணியின் பின்கள பணியாளர்கள் என அனைவரும் குறைந்தபட்சம் ஆறு நாட்கள் தனிமப்படுத்தப்பட்டு (Quarantine), கொரோனா பரிசோதனை செய்த பிறகு அதன் முடிவை பொறுத்தே தொடரில் பங்கேற்க முடியும் என பி.சி.சி.ஐ கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
அனைத்து அணி வீரர்களும் அதை பின்பற்றி தற்போது துபாயில் பயோ பபுளில் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டம் இன்று மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. அதில் விளையாடி முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் துபாய் புறப்பட திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும் ஆறு நாட்களாக பதிலாக தங்களை மூன்று நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தினால் தங்களாலும் தொடரின் ஆரம்ப போட்டிகளிலிருந்தே விளையாட முடியும் என இரு அணி வீரர்களும் பி.சி.சி.ஐக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித், வார்னர், ஹேசல்வுட், பின்ச், ஸ்டொய்னிஸ் மாதிரியான ஆஸ்திரேலிய வீரர்களும், இயன் மோர்கன், பட்லர், ஆர்ச்சர் மாதிரியான இங்கிலாந்து வீரர்களும் தற்போது இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.
தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
இதையும் படிக்கவும் : https://bit.ly/2Ru9ftm