விளையாட்டு

பெண்கள் டி20 உலகக்கோப்பை: முதன்முறையாக தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி!

webteam

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 10 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து - இந்தியா ஆகிய அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் கடுமையான இலக்கை நோக்கி இறுதிவரை போராடிய இந்திய மகளிர் அணி, 5 ரன்களில் வெற்றியைத் தவறவிட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது அரையிறுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, அவ்வணியில் களமிறங்கிய தொடக்க பேட்டர்கள் வால்வார்டிட் மற்றும் பிரிட்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். வால்வார்டிட் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க, மறுமுனையில் பிரிட்ஸ் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பேட்டர்களில் காப்-ஐ தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காப், 27 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில், சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி.