விளையாட்டு

`இத்துடன் திருப்தி அடையப் போவதில்லை...’- ஆனந்த கண்ணீர் விட்ட கேப்டன் ஷஃபாலி வர்மா!

JustinDurai

போட்டிக்குப் பின் தொகுப்பாளரிடம் நேர்காணல் அளிக்கையில் இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று, அதைத் தொடர்ந்து நடந்த 'சூப்பர் 6' சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், சென்வெஸ் பூங்கா மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.  'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷஃபாலி வர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய யு-19 மகளிர் அணி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை எவ்வித உலகக்  கோப்பையும் வென்றது இல்லை. 2005, 2017ல் ஒருநாள், 2020ல் 'டி-20' என மூன்று உலக கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணிக்கு 2வது இடமே கிடைத்தது. அப்படியான நிலையில் நேற்று, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அசத்திய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய யு-19 மகளிர் அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது.

போட்டிக்குப் பின் தொகுப்பாளரிடம் நேர்காணல் அளிக்கையில் இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா ஆனந்த கண்ணீர் வடித்தார். நா தழுதழுத்த குரலில் அவர் அழுதபடியே பேசினார்.

சக வீராங்கனைகள் கைதட்டி, கரகோஷம் எழுப்பி ஷஃபாலி வர்மாவை ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து பேசிய ஷஃபாலி வர்மா, “இது வெறும் ஆரம்பம்தான். இத்துடன் திருப்தி அடைந்துவிட மாட்டேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் நன்றி. முக்கியமாக மைதானத்தில் அவர்கள் செயல்படட்ட விதத்துக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்த விதத்துக்கும் நன்றி” என்றார். முதலாவது யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ள இந்திய அணி வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.