விளையாட்டு

தவான் புகார்: எமிரேட்ஸ் மன்னிப்பு!

தவான் புகார்: எமிரேட்ஸ் மன்னிப்பு!

webteam

துபாயில் தனது குழந்தைகளும் மனைவியும் தடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் எமிரேட்ஸ் விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. இது நீண்ட நாள் டூர் என்பதால் சில வீரர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றார். மும்பையில் இருந்து துபாய் சென்ற இந்திய கிரிக்கெட் அணி, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் தென்னாப்பிரிக்கா சென்றது. ஆனால், தவானின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு போர்டிங் பாஸ் வழங்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் மறுத்துவிட்டது. குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் இல்லை எனக்கூறி விமான நிலைய ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். பின்னர் தவானின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுக்காக துபாயில் காக்க வைக்கப்பட்டனர்.

இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை பாதி வழியில் விட்டுவிட்டு தவான் சக வீரர்களுடன் தென்னாப்ரிக்கா சென்றார். 
இச்சம்பவம் தொடர்பாக தவான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

ஆவணங்கள் தொடர்பாக மும்பையில் விமானத்தில் ஏறும்போதே, விமான நிறுவனத்தினர் கேட்க வேண்டியது தானே என்றும் இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தனது ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

‘தென்னாப்பிரிக்க சட்டப்படி, குழந்தைகளுக்காக பிரத்யேக நடைமுறைகளை கடைப்பிடிக்க அந்நாடு வலியுறுத்தியுள்ளது. அதை அனைத்து விமான நிறுவனங்களும் இப்போது பின்பற்றி வருகிறோம். அப்படித்தான் இப்போதும் பின்பற்றியுள்ளோம். இதில் விதிமீறலோ, கடுமையோ எதுவும் இல்லை. இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை. இதுதொடர்பான அசவுகரியங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.