கிரிக்கெட் உலகில் அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போனவர் ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை அவர் எந்த சீசனில் விளையாடுகிறார், எந்த சீசனில் சொதப்புவார் என்றே கணிக்க முடியவில்லை. 2014 சீசனில் 552 ரன்கள் குவித்து மிரட்டியவர், கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதுவும், மேக்ஸ்வெல்தானா இது என்ற அளவிற்கு அவரது பேட்டிங் கடந்த சீசனில் இருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆஸ்தான ஹிட்டராக திகழ்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியை காட்டுகிறார். நடப்பு சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 350 ரன்கள் குவித்து உள்ளார். 4 அரைசதம் எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் 30 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார்.
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த ஆர்சிபி ரசிகர்களின் கண்களில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு ஒன்று சிக்கியுள்ளது. எலன் மஸ்க் அந்த ட்விட்டரில் மேக்ஸ்வெல் வியக்கதகு மனிதராக இருந்தார் என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் வெறும் மேக்ஸ்வெல் என்று குறிப்பிட்டு இருந்ததால் அது க்ளென் மேக்ஸ்வெல்தான் என்று நினைத்துக் கொண்ட ஆர்சிபி ரசிகர்கள், எலன் மஸ்கே பாராட்டி விட்டார் என்று கருத்துகளை அள்ளித் தெளித்து வந்தனர்.
‘ஆமாம் சார், நாங்களும் நேற்று ஆர்சிபி மேட்ச் பார்த்தோம்’, ‘மேக்ஸ்வெல்க்காகவே ஆர்சிபி போட்டிகளை நான் பார்த்து வருகிறேன்’ என்பது போன்று ட்வீட்டுகளை பதிவிட்டு தள்ளினர். சிலர், ஆர்சிபி-யில் எனக்கு மேக்ஸ்வெல்லை விட ஏபி டிவில்லியர்ஸை தான் பிடிக்கும் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், கொதித்தெழுந்த உண்மை அறிந்தவர்கள், அவர் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் அல்ல, சயின்டிஸ்ட் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் என்று பதில் அளித்தனர். ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மேக்ஸ்வெல்லின் விதவிதமான புகைப்படங்களை அந்த ட்விட்டர் பதிவில் ரசிகர்கள் கமெண்ட் செய்துவந்தனர்.
உண்மையில் எலன் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ்.காம் வெளியிட்ட ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் தொடர்பான செய்திக்குத்தான் ரிப்ளை செய்து இருந்தார்.