ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சதமடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுணில் நேற்றுத் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் டீன் எல்கரும் மார்க்ரமும் களமிறங்கினர். மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமல் ஹசல்வுட் பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லா, 31 ரன்களிலும் டிவில்லியர்ஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் டுபிளிசிஸ் 5 ரன்னிலும், பவுமா ஒரு ரன்னிலும் விக்கெட் கீப்பர் டிகாக் 3 ரன்னிலும் பிலாண்டர் 8 ரன்னிலும் கேசவ் மகாராஜ் 3 ரன்னிலும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் எல்கர் நிலைத்து நின்று ஆடி 121 ரன்கள் குவித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. எல்கரும் ரபாடாவும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் மார்ஷ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.