என்னை நீங்கள் கீழே இழுக்கும்போதெல்லாம் அதிக பலத்துடன் திரும்பி எழுவேன் எனத் தடகள வீராங்கனை டூட்டி சந்த் தெரிவித்துள்ளார்.
தடகள வீராங்கனையான டூட்டி சந்த் கடந்த மே மாதம், தான் ‘ஒருபால் ஈர்ப்பாளர்’ என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் தன் குடும்பத்தினரும் தன்னை ஒதுக்குவதாக அவர் புகார் கூறியிருந்தார். டூட்டி சந்த், ஒருபால் ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகவே பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்று வரும் 30-வது கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
இவ்வெற்றிக்குப் பின் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தன்னம்பிக்கை தரும் பதிவை இட்டுள்ளார். அதாவது, என்னை நீங்கள் கீழே இழுக்கும் போதெல்லாம் அதிக பலத்துடன் நான் திரும்பி மேலே எழுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் வென்ற டூட்டி சந்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து முயற்சி செய்துக் கொண்டே இருங்கள் எனக் கூறியுள்ள குடியரசுத் தலைவர் ஒலிம்பிக்கிலும் சாதனை படைக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.