விளையாட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தகுதி

நிவேதா ஜெகராஜா

ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்ளும் சிறப்பை பெறுகிறார் இந்திய வீராங்கனை டூட்டி சந்த்.

ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது வீராங்கனை, டூட்டி சந்த். ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதித்தவர் இவர். விசைத்தறி தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த டூட்டி சர்வதேச அளவில் சாதிக்கத் தொடங்கினார். 2018-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கங்களை வென்று அசத்தினார்.

இதேபோல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 4 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கான அவரது தேர்வு அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் தரநிலை அடிப்படையில் தேர்வாக 22 இடங்களும், 200 மீட்டர் ஓட்டத்தில் 15 இடங்களும் எஞ்சியிருந்தன. 100 மீட்டர் ஓட்டத்தில் சர்வதேச தரநிலையில் 44 ஆவது இடத்திலும், 200 மீட்டர் ஓட்டத்தில் 51 ஆவது இடத்திலும் இருக்கிறார். அதனடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் தகுதிபெற்றார்.

முன்னதாகவே நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு இருந்தும் அதனை அவர் இழந்தார். தேசிய இண்டர் ஸ்டேட் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 4 ஆவதாக வந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். கடந்த வாரம் பாட்டியலாவில் நடைபெற்ற இண்டியன் கிராண்ட் ப்ரீ போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.17 நொடிகளில் எட்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். எனினும் 0.02 நொடிகளில் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். என்றாலும் தரநிலையின் அடிப்படையில் தற்போது டோக்கியோ செல்வதை அவர் உறுதிபடுத்தியிருக்கிறார்.