விளையாட்டு

பயிற்சிக்காக தன்னுடைய ஆடம்பர காரை விற்க போவதாக அறிவித்த டூட்டி சந்த்!

webteam

பயிற்சிக்காக தன்னுடைய ஆடம்பர காரை விற்கப் போவதாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் தனது சமூக வலைதளத்தில் அறிவித்து பின்னர் டெலிட் செய்துள்ளார்.

இத்தாலியில் நடைபெற்ற 30-வது கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் டூட்டி சந்த். இதன்மூலம் அப்போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்த வருடம் பங்கேற்பதற்காக தனது ஆடம்பர காரை விற்க போவதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

 இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நான் எனது காரை விற்க போகிறேன். யாருக்காவது தேவை என்றால், என்னை தொடர்புகொள்ளலாம் என பதிவிட்டிருந்தார். இது குறித்து இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர், இந்த கடினமான சூழல் தான் என்னை அப்படி பதிவிட வைத்துள்ளது.

நான் ஒலிம்பிற்காக தயாரானேன். ஆனால் தள்ளி சென்றுவிட்டது. இப்போது என்னால் சமாளிக்க முடியவில்லை. என் கையில் செலவுக்கு பணம் இல்லை. என தெரிவித்துள்ளார்.ஆனால் அவரின் மேலாளர் கூறிய அறிவுரையின் படி அந்த பதிவு நீக்கப்பட்டது.

மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. ஒலிம்பிக்கிற்கு தற்போது வாய்ப்பு இல்லை. என்னிடம் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. சில மாதங்களாக எனக்கு வருமானமும் இல்லை. வேறு ஸ்பான்சர்ஸ் யாரும் கிடைக்காவிட்டால் எனது காரை விற்பது தான் ஒரே வழி எனத் தெரிவித்துள்ளார்.