இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா, விளையாடி களைத்து போன தனது தந்தைக்கு தண்ணீர் கொடுக்கும் க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர்களும் பங்கேற்ற கால்பந்து விளையாட்டு போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணிக்கு ‘ஆல் ஹார்ட் எஃப்சி’ எனவும், நடிகர் ரன்பீர் கபூர் தலைமையிலான அணிக்கு ‘ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி’ எனவும் பெயரிடப்பட்டிருந்தது. போட்டி தொடங்கிய 5வது நிமிடமே ஆல் ஹார்ட் எஃப்சி அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் தோனி ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 39வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்து அசத்தினார். போட்டி முடிவில் கேப்டன் கோலி தலைமையிலான அணி 7 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டி நிறைவில் 2 கோல் அடித்து அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. அப்போது விளையாடி களைப்பாக திரும்பிய தோனிக்கு அவரது மகள் ஜிவா, தண்ணீர் பாட்டிலை பாசத்துடன் வழங்கியுள்ளார். இந்த வீடியோ தோனி ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவு செய்து வருகின்றனர்.