விளையாட்டு

'இனி நான் யாரோ.. பிசிசிஐ யாரோ' - முரளி விஜய் விரக்தி பேச்சு

JustinDurai

இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்டுள்ள முரளி விஜய், இனி பிசிசிஐ உடன் எந்தவித தொடர்பும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், கடைசியாக 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின்னர் உள்நாட்டு தொடர்களில் மட்டுமே ஆடி வருகிறார். இந்த நிலையில் விளையாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முரளி விஜய், பிசிசிஐ உடன் தனக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் முறிந்துவிட்டதாக மனவருத்தத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில், ''இனி பிசிசிஐ உடன் எந்தவித தொடர்பும் இல்லை தற்போது வெளிநாடுகளில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருக்கிறேன். அங்கு சென்று உள்நாட்டு தொடர்களில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக ஏற்படுகளாக தான் உள்ளூர் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன்.

இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் இழிவாக பார்க்கப்படுகின்றனர். அதாவது 80 வயதான முதியவர் சாலையில் நடப்பது போல நினைக்கின்றனர். என்னால் முடிந்தவரை நான் சிறப்பாக ஆட முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளே இங்கு எனக்கு தரப்படவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் தான் வாய்ப்பு தேடி அழைய வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது 38 வயதான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் (3,982 ரன்கள்), 17 ஒருநாள் (339 ரன்கள்) மற்றும் 9 டி20 (169 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.