இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் அனுபவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீர்ர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர், ஆஸி. அணியில் பேட்டிங்கிலும், கீப்பிங் செய்வதிலும் சிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்தார். தோனி இந்திய அணியில் நீடிப்பது மிகவும் முக்கியமானது என்றும், அவர் அனுபவத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். தோனி 3 லிருந்து 7வது வீரராக களத்தில் இறங்கி சிறப்பான பேட்டிங் செய்யக்கூடிய பலத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்று கூறிய கில்கிறிஸ்ட், கடந்த 12 மாதங்களாக அவருடைய ஆட்டங்களின் புள்ளிவிவரங்கள் தனக்கு தெரியாது என்றாலும், அணிக்கு தேவையானதை அவர் சிறப்பாகச் செய்வார் என்று நம்புவதாகக் கூறினார். 2019 உலகக்கோப்பை அணியில் கூட தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய இன்னொரு வீரர் இருப்பதாக தனக்கு தோன்றவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய கில்கிறிஸ்ட், தான் விராத் கோலியையும், இந்திய வீரர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும் விரும்புவதாகத் தெரிவித்தார். பேட்டிங்கில் இதுவரை செய்யப்பட்ட சாதனைகள் ஒவ்வொன்றையும் முறியடித்து புதிய சாதனைகளை படைக்கக் கூடிய தகுதி விராத் கோலிக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.