விளையாட்டு

கொரோனா விதிகளை மீறினார்களா இந்திய வீரர்கள்? தனிமைப்படுத்தலில் ரோகித் சர்மா

கொரோனா விதிகளை மீறினார்களா இந்திய வீரர்கள்? தனிமைப்படுத்தலில் ரோகித் சர்மா

EllusamyKarthik

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் கொரோனா பரவல் காரணமாக பயோ பபூளில் உள்ளனர். அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் இதில் உள்ளனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் சிலர் பயோ பபூளிலிருந்து வெளியேறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அந்த விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ரோகித் ஷர்மா மற்றும் ரிஷப் பண்டின் பெயரும் அடிபடுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறதாம். 

மெல்பேர்னில் உள்ள உணவகம் ஒன்றில் பண்ட் மற்றும் ரோகித் ஷர்மா அமர்ந்திருக்கும் வீடியோவை நவல்தீப் சிங் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு வீரர்கள சாப்பிட்ட உணவுக்கான கட்டணத்தை தான் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் வீரர்களை கட்டி அணைத்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் சனிக்கிழமை அன்று வீரர்கள் தன்னிடமிருந்து இடைவெளியை கடைபிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் வீரர்கள் கொரோனா பயோ பபூள் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிகளை மீறியமைக்காக இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, பண்ட், பிருத்வி ஷா, சுப்மன் கில், சைனி ஆகியோர் தனிமைப்படுத்த்ப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சிட்னியில் உருமாறிய கொரோனாவின் தீவிரம் அதிகம் உள்ளதால் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி சிட்னியில் வரும் 7 ஆம் தேதி அன்று ஆரம்பமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.