விளையாட்டு

நம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த்

நம்பர்.1 அல்ல.....சிறப்பான ஆட்டமே லட்சியம்: ஸ்ரீகாந்த்

rajakannan

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிப்பதை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டோவை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்ரீகாந்த், முதல் இந்திய வீரராக ஒரே காலண்டர் வருடத்தில் 4 சூப்பர் சீரியஸ் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல், தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரை முடித்து தாயகம் திரும்பிய ஸ்ரீகாந்திற்கு ஐதராபாத் விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்த ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால் என்னுடைய நோக்கம் அது அல்ல. ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும். தரவரிசை பின்னால் ஓடவிரும்பவில்லை. தரவரிசை குறித்து நான் யோசிப்பதேயில்லை. கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தேன். காயம் என்பது எல்லா விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் வருவதுதான். மீண்டு வர எத்தனை காலம் ஆகும் என்று தெரியாது. ஆனால், நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். என்னுடைய பயிற்சியாளர் கோபி எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தார். அவருக்கே எல்லா பெருமையும் சேரும்” என்றார்.