விளையாட்டு

வயது 18; இலக்கு ஒலிம்பிக் பதக்கம்.. அசர வைக்கும் திவ்யான்ஷ் சிங் பன்வார்

JustinDurai
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணியில் இளம் வயதுக்காரராக இருக்கிறார் திவ்யான்ஷ் சிங் பன்வார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ராஜ்வர்தன் சிங் ரத்தோர், கர்னி சிங், ஓம்பிரகாஷ் திர்வால், அபுர்வி சண்டேலா போன்ற ஜாம்பவான் துப்பாக்கிச்சுடுதல் வீரர்-வீராங்கனைகளை உருவாக்கிய ராஜஸ்தானில் இருந்து மற்றொரு நாயகனாக துளிர்த்திருக்கிறார் திவ்யான்ஷ் சிங் பன்வார். 18 வயதே ஆன திவ்யான்ஷ் சிங் பன்வார் ஜெய்ப்புரில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர்.
இந்த சின்ன வயதுக்காரர் படிப்பில் சராசரி தான். ஆனால் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருப்பவர். சிறுவயதில் அவரது தந்தை அஷோக் பன்வார் சுவரில் இலக்கை வரைந்து பிளாஸ்டிக் துப்பாக்கியால் சுடச்சொல்லி பயிற்சி கொடுத்திருக்கிறார். என்றாலும் திவ்யான்ஷ் சிங் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார். அதிலிருந்து மடைமாற்ற விரும்பிய தந்தை அஷோக் மகனை கர்னி சிங்-கின் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டிருக்கிறார். தீபக் குமார் துபே என்ற பயிற்சியாளரால் பட்டைதீட்டப்பட்ட திவ்யான்ஷ், பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கத் தொடங்கினார். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு போட்டிகளில் தேசிய சாம்பியன் பட்டங்களை வென்ற அவர், பின்னர் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் திவ்யான்ஷ் சிங் பன்வார் பதக்க வேட்டையை 2018-ஆம் ஆண்டில் தொடங்கினார். அந்தாண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் இளையோர் உலகக்கோப்பை போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில், ஆடவர் அணிப் பிரிவு மற்றும் கலப்பு பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றார். அதே ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இளையோர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 2019-ஆம் சீனியர் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அவர், 4 தங்கம், ஒரு வெள்ளி, மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.
2019-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதையடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திவ்யான்ஷ் சிங் பன்வார். அப்போது அவரது வயது 16. இரு ஆண்டுகளில் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டுள்ள திவ்யான்ஷ் இப்போது ஒலிம்பிக் பதக்கத்தை எதிர்நோக்கியுள்ளார்.