இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை இலங்கை தொடரில் கேப்டனாக்காதது வருத்தமளிப்பதாக சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து Cricketnext இணையதளத்துக்கு பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யாவால் கிரிக்கெட்டின் அனைத்து வகையான பங்களிப்பையும் செய்ய முடியும். கிரிக்கெட்டின் நுட்பமும், பொறுமையும், முதிர்ந்த குணமும் அவருக்கு உண்டு. அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதெல்லாம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை மைதானத்தின் தன்மை, சீதோஷனம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அவரிடம் அனைத்து சூழல்களையும் கையாளும் திறன் இருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யாவால் இன்னும் 7 ஆண்டுகள் வரைக்கும் கூட இந்திய அணிக்காக விளையாட முடியும். அவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. இலங்கை தொடரில் அவருக்கு கேப்டனாகும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம். அவருக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம்தான். இந்தியாவுக்காக மூன்று பார்மெட்களும் அவர் விளையாடி இருக்கிறார். அதனால் அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை" என்றார் ஜிதேந்திர சிங்.
தொடர்ந்து பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யா சிறுவயதில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் என்னுடன் மரியாதையுடன் பழகி வருகிறார். அவர் நல்ல மனிதரும் கூட. ஒரு ஆல் ரவுண்டராக இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும். தன்னுடைய பவுலிங்கை மிகவும் சீரியசாக எடுத்து வருகிறார் பாண்ட்யா" என்றார் ஜிதேந்திர சிங்.