'இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்' என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் நேற்று விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக அடித்து அரை சதம் எடுத்தனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக் அணியில் அதிக அளவாக 66 ரன்கள் (34 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பின் பேசிய தினேஷ் கார்த்திக், ''நான் ஒரு பெரிய இலக்கை வைத்திருக்கிறேன் என முதலில் சொல்லி கொள்கிறேன். நான் உண்மையில் கடுமையாக உழைத்து வருகிறேன். நாட்டுக்கு சிறப்புடன் ஏதேனும் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம். அது எனது பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் நான் முயன்று கொண்டிருக்கிறேன்.
ஷாபாஸ் ஒரு சிறந்த வீரர், அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் சவாலுக்கு தயாராக இருக்கிறார். அவரால் நீண்ட தூரம் பந்தை அடிக்க முடியும்'' என்று கூறினார்.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐபிஎல்: மண்ணை கவ்விய டெல்லி; அசத்தலாக வெற்றிப்பெற்ற ஆர்சிபி