தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை பஞ்சாப் அணி நேற்று ஏலத்தில் எடுத்தது. இதனை தமிழக வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அந்த வீடியோவை தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் நேற்று ஐபிஎல் 2021 ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவரது அடிப்படை விலை 20 லட்ச ரூபாய் ஆகும். அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணியில் விளையாடி இருந்தார் ஷாருக். இறுதி போட்டியில் 7 பந்துகளில் 18 ரன்களை அடித்து அமர்க்களப்படுத்தி இருந்தார் ஷாருக். அதில் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.
இதனையடுத்து சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியலில் 220.0 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடம் பிடித்தார். அப்போதே ஷாருக்கானை இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும் என சொல்லப்பட்டது. அது இப்போது பலித்துள்ளது. டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டின. இறுதியில் பஞ்சாப் அணி அவரை பிக் செய்தது.
இப்போது விஜய் ஹசாரே கோப்பையில் பங்கேற்பதற்காக தமிழக அணி இந்தூர் சென்றுள்ளது. விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டி நாளை பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலத்தை பேருந்தில் செல்போனில் பார்த்த ஷாருக்கான் உள்பட தமிழக வீரர்கள் பார்த்துள்ளனர். அப்போது ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனை ஆரவாரத்தோடு சக தமிழக வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோவை தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.